ராகுல் டிராவிட் கிரேட் கேப்டன்; என்னையும் தோனியையும் வளர்த்துவிட்டதே அவருதான்! இர்ஃபான் பதான் பகிர்ந்த ரகசியம்

By karthikeyan VFirst Published May 31, 2020, 4:14 PM IST
Highlights

ராகுல் டிராவிட் கேப்டன்சியில் தான் ஆடிய நினைவுகளை இர்ஃபான் பதான் பகிர்ந்துள்ளார். 
 

சர்வதேச கிரிக்கெட்டில், ஆல்டைம் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ராகுல் டிராவிட்டும் ஒருவர். தனது கெரியரில் ஒரு இன்னிங்ஸை கூட சுயநலத்திற்காக ஆடாத ஒரு வீரர் என்றால், அது ராகுல் டிராவிட் தான் என்பதை எந்தவித தயக்கமும் இல்லாமல் சொல்லலாம். 

இந்திய அணிக்காக தனது சிறந்த பல இன்னிங்ஸ்களால், வெற்றியை தேடிக்கொடுத்துள்ள டிராவிட், இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படுகிறார். அனைவராலும் நல்ல பேட்ஸ்மேனாக அறியப்படும், ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியை பற்றி அவரது கேப்டன்சியில் ஆடிய வீரர்கள் கூட பெரிதாக பேசமாட்டார்கள்; பேசியதில்லை. 

இந்திய அணியை 25 டெஸ்ட் மற்றும் 79 ஒருநாள் போட்டிகளில் ராகுல் டிராவிட் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். ராகுல் டிராவிட் சிறந்த கேப்டன் தான். அவரது கேப்டன்சியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி பல சிறந்த வெற்றிகளை பெற்று, வெளிநாடுகளில் தொடர்களையும் வென்றுள்ளது. ஆனாலும் 2007 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையில் அவரது கேப்டன்சியில் லீக் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறியது அவரது கேப்டன்சி கெரியரில் கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. 

அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்த சமயத்தில், இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலுக்கும் வீரர்களுக்கும் இடையே நல்ல புரிதல் கிடையாது.  அணியின் ஒற்றுமை மற்றும் வீரர்களுக்கு இடையே இருந்த இணக்கமான சூழலை கிரேக் சேப்பல் கெடுத்துவிட்டார். அதுதான் முக்கியமான பிரச்னை. அதன் எதிரொலியாகத்தான் இந்திய அணி படுமோசமாக ஆடி, வங்கதேசம் மற்றும் இலங்கையிடம் தோற்று லீக் சுற்றிலேயே வெளியேறியது. 

அந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று கேப்டன்சியிலிருந்து ராகுல் டிராவிட் விலகியபின்னர் தான், தோனி இந்திய அணியின் கேப்டன் ஆனார். இந்நிலையில், ராகுல் டிராவிட் சிறந்த கேப்டன் தான் என்றாலும் கூட, கங்குலி, கும்ப்ளே, தோனியை பற்றி பேசும் பல வீரர்கள் ராகுல் டிராவிட்டை பற்றி பேசுவதில்லை. 

இந்நிலையில், ராகுல் டிராவிட் குறித்தும் அவரது கேப்டன்சி குறித்தும் இர்ஃபான் பதான் பேசியுள்ளார். ராகுல் டிராவிட் குறீத்து பேசிய இர்ஃபான் பதான், நான் தாதாவின் கேப்டன்சியில் தான் அறிமுகமானேன் என்பது அவர் எனக்கு மிகுந்த ஆதரவளித்தார் என்பதும் அனைவருக்கும் தெரியும். அனில் கும்ப்ளே கேப்டன்சியிலும் நிறைய போட்டிகளில் ஆடியிருக்கிறேன். தோனி நிறைய சாதனைகளை செய்திருக்கிறார். ஆனாலும் எனக்கு ராகுல் டிராவிட்டின் கேப்டன்சியில் ஆடத்தான் ரொம்ப பிடிக்கும். ஏனெனில் அவர் கேப்டனாக இருக்கும்போது, முறையான கம்யூனிகேஷன் இருக்கும்.

நிறைய பேர் ராகுல் டிராவிட்டின் கேப்டன்சி குறித்து பேசமாட்டார்கள். டிராவிட்டின் கேப்டன்சியில் மிகப்பெரிய இலக்குகளை சேஸ் செய்து சாதனை படைத்திருக்கிறோம். 2007 உலக கோப்பையில் தோற்று வெளியேறிய 3 நாட்களுக்கு பின், நாங்கள் எல்லாரும் மனமுடைந்து போய் இருந்தோம். அப்போது என்னையும் தோனியையும் ராகுல் டிராவிட், சினிமாவுக்கு அழைத்து சென்றார்.

ராகுல் டிராவிட் என்னை ஒருமுறை அழைத்து, இர்ஃபா... இதுவே முடிவல்ல. நீ நிறைய கிரிக்கெட் ஆடியிருக்கிறாய்.. இன்னும் நிறைய ஆட வேண்டும். நாம் தோற்றது மிகப்பெரிய இழப்புதான். ஆனால் நீயும் தோனியும் இந்திய அணிக்காக நிறைய ஆட வேண்டும் என்று எங்களை ஊக்கப்படுத்தினார். அவரது வார்த்தைகள் ஒவ்வொன்றும் எங்களை அடுத்தகட்டத்தை நோக்கி நகர உற்சாகப்படுத்தின என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார். 

ராகுல் டிராவிட் கேப்டன்சியிலிருந்து விலகியதும் தோனி கேப்டனான அடுத்த சில மாதங்களிலேயே இந்திய அணி, டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதன்பின்னர் இந்திய அணி, தோனியின் கேப்டன்சியில் 2011ல் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை மற்றும் 2013ல் சாம்பியன்ஸ் டிராபி ஆகியவற்றை வென்றது. 
 

click me!