இவன் எதிர்காலத்துல பெரிய ஆளா வருவான்னு நம்பி வளர்த்துவிட்டதே தாதா தான்..! மேட்ச் வின்னரை உருவாக்கிய கங்குலி

By karthikeyan VFirst Published Aug 3, 2020, 3:47 PM IST
Highlights

யுவராஜ் சிங் தனது கெரியரின் தொடக்கத்தில் திணறியபோது, அவர் மீது நம்பிக்கை வைத்து அவரை மேட்ச் வின்னராக உருவாக்கியது கங்குலி என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இந்திய அணி சூதாட்டப்புகாரில் சிக்கி அனைவரின் நம்பிக்கையையும் இழந்து சிதைந்து போயிருந்த நேரத்தில், இந்திய அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்று, திறமையான இளம் வீரர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவளித்து வளர்த்துவிட்டதுடன், ஆக்ரோஷமான இளம் இந்திய அணியை கட்டமைத்து சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வெற்றி நடை போடவைத்தவர் கங்குலி.

இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை மனதில்வைத்து, சிறந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பும் ஆதரவும் அளித்து வளர்த்துவிட்டவர் கங்குலி. யுவராஜ் சிங், சேவாக், ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், தோனி என பல மேட்ச் வின்னர்களை இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுத்தவர் கங்குலி. இவர்கள் கெரியரின் தொடக்கத்தில் தடுமாறிய காலத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருந்து, அவர்கள் திறமையின் மீது நம்பிக்கை வைத்து அதை நிரூபிக்கும் வரை தொடர் வாய்ப்பளித்தார். 

கங்குலி சிறந்த நிர்வாகத்திறனும் தலைமைப்பண்பும் கொண்ட சிறந்த கேப்டன் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது பிசிசிஐயின் தலைவராக இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காக உழைத்துவரும் கங்குலி, அடுத்ததாக ஐசிசியின் தலைவராகி சர்வதேச கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றவுள்ளார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் கங்குலி தான் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. இந்திய கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய இர்ஃபான் பதான், கங்குலி தான் சிறந்த கேப்டன். இந்திய அணியை கட்டமைப்பதில் உறுதியாக இருந்து அதை செய்துகாட்டினார் கங்குலி. யுவராஜ் சிங் அவரது கெரியரின் தொடக்கத்தில் சரியாக ஆடவில்லை; கடுமையாக போராடினார். ஆனால் கங்குலி அவருக்கு ஆதரவாக இருந்தார்.

இந்த பையன்(யுவராஜ்) எதிர்காலத்தில் சிறந்த வீரராக திகழப்போகிறான் என்று நம்பிய கங்குலி, யுவராஜ் சிங்கிற்கு ஆதரவளித்தார். அதுதான் எதிர்காலத்தில் நடக்கவும் செய்தது என்று இர்ஃபான் பதான் தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட்டின் மேட்ச் வின்னர்களில் யுவராஜ் சிங் முக்கியமானவர். கங்குலியால் உருவாக்கப்பட்ட யுவராஜ் சிங், நல்ல அனுபவத்தையும் முதிர்ச்சியையும் பெற்று தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி நிறைய சாதிக்க உதவினார். 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பை ஆகியவற்றை வெல்ல முக்கிய பங்காற்றினார். 2011 உலக கோப்பை தொடரின் ஆட்டநாயகனே யுவராஜ் சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்காலத்தில் மிகப்பெரிய மேட்ச் வின்னராக திகழ்ந்த யுவராஜ் சிங்கை, அவரது கெரியரின் தொடக்கத்தில் திணறிய காலக்கட்டத்தில் ஆதரவும் தொடர் வாய்ப்பும் அளித்தது கங்குலி. 
 

click me!