சங்கக்கரா மனைவியை பற்றி பேசினேன்.. இர்ஃபான் பதான் பகிர்ந்த ஸ்லெட்ஜிங் ஃப்ளாஷ்பேக்

By karthikeyan VFirst Published Jan 5, 2020, 5:28 PM IST
Highlights

அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்த இர்ஃபான் பதான், சங்கக்கராவுடனான ஸ்லெட்ஜிங் மோதல் குறித்து பேசியுள்ளார். 
 

இந்திய அணியின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான இர்ஃபான் பதான் நேற்று ஓய்வு அறிவித்தார். 2003ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான இர்ஃபான் பதான் 2012ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடினார். 29 டெஸ்ட் போட்டிகளிலும் 120 ஒருநாள் போட்டிகளிலும் இர்ஃபான் பதான் ஆடியுள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்திய இரண்டாவது இந்திய பவுலர் இர்ஃபான் பதான்.  ஹர்பஜன் சிங்கிற்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் வீழ்த்தியது அவர் தான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், சல்மான் பட், யூசுஃப், யூனிஸ் கான் ஆகிய சிறந்த வீரர்களை அடுத்தடுத்த பந்தில் வீழ்த்தியவர். 

2012ம் ஆண்டுக்கு பிறகு இர்ஃபான் பதான் இந்திய அணியில் ஆடவில்லை. ஐபிஎல்லில் 2017ம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணியில் இருந்தார். அதன்பின்னர் கடந்த 2 சீசன்களிலும் ஆடவில்லை. இந்நிலையில் அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் இர்ஃபான் பதான் ஓய்வு அறிவித்துள்ளார். 

இர்ஃபான் பதானுக்கு முன்னாள் வீரர்களும், அவருடன் ஆடிய சக வீரர்களும் அவருடனான நினைவுகளை பகிர்ந்ததோடு, அவரது புகழ்பாடி அவரது எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில், சங்கக்கராவுடனான ஸ்லெட்ஜிங் நிகழ்வு குறித்த நினைவுகூர்ந்துள்ளார் இர்ஃபான் பதான். அதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், எனக்கு சங்கக்கராவுடனான ஒரு நிகழ்வு நன்றாக நினைவிருக்கிறது. டெல்லியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட் போட்டியில், சேவாக் காயத்தால் ஆடமுடியாததால், அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் நான் தொடக்க வீரராக இறங்கினேன். அந்த போட்டியில் நான் நன்றாக ஆடினேன். 93 ரன்கள் அடித்தேன். அந்த போட்டியில் இலங்கை அணி கிட்டத்தட்ட தோற்பது உறுதியாகிவிட்டது. 

அப்படியான சூழலில், சங்கக்கரா என்னை தனிப்பட்ட முறையில் தாக்கும் விதமாக எனது பெற்றோரை பற்றி மோசமாக பேசினார். உடனே, நான் சங்கக்கராவின் மனைவியை பற்றி பேசினேன். அந்த சம்பவத்திற்கு பின் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது. 

அந்த சம்பவம் நடந்து சில காலம் கழித்து, ஐபிஎல்லில் பஞ்சாப் அணியில் இருவரும் இணைந்து ஆடினோம். அந்த சமயத்தில் சங்கக்கராவின் மனைவியும் இருந்தார். அப்போது, சங்கக்கரா அவரது மனைவியிடம் என்னை காட்டி, இவர்தான் அன்றைக்கு உன்னை பற்றி தவறாக பேசியவர் என்று சொன்னார். உடனே நான் மன்னிப்பு கேட்டேன். ஆனால் அதன்பின்னர் சங்கக்கரா நடந்த உண்மையை எடுத்துக்கூறினார். நான்(சங்கக்கரா) அவரது(இர்ஃபான் பதான்) பெற்றோரை ஏசும் விதமாக பேசினேன். அதன்பின்னர் தான் இர்ஃபான், உன்னை பற்றி பேசினார் என்று சங்கக்கரா அவரது மனைவியிடம் தெரிவித்தார். அதன்பின்னர் இருவரும் நண்பர்களாகிவிட்டோம் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார். 
 

click me!