அனுபவ ஆண்டர்சனின் வேகத்தில் சரணடைந்த தென்னாப்பிரிக்கா.. முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Jan 5, 2020, 2:51 PM IST
Highlights

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அந்த அணியை 223 ரன்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து அணி. அனுபவ ஃபாஸ்ட் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 
 

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது போட்டி கேப்டவுனில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 269 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க வீரர் டீன் எல்கர் மற்றும் வாண்டெர் டசன் ஆகிய இருவரை தவிர மற்ற எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. 

தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் நிலைத்து நின்று அபாரமாக ஆடிய எல்கர், 88 ரன்களை குவித்தார். வாண்டெர் டசனும் சிறப்பாக ஆடி 68 ரன்களை குவித்தார். கேப்டன் டுப்ளெசிஸ், ஹம்சா, தொடக்க வீரர் மாலன், குயிண்டன் டி காக், ஃபிலாண்டன், ப்ரிட்டோரியஸ் ஆகிய அனைவருமே சொதப்பினர்.

 

இதையடுத்து 223 ரன்களுக்கே தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டானது. ஃபாஃப் டுப்ளெசிஸின் விக்கெட்டை வீழ்த்திய ஆண்டர்சன், டெயிலெண்டர்களின் விக்கெட்டுகளை மளமளவென வீழ்த்தினார். டுப்ளெசிஸ் மற்றும் தென்னாப்பிரிக்காவின் கடைசி 4 விக்கெட்டுகளையும் ஆண்டர்சன்  தான் வீழ்த்தினார். அனுபவ ஃபாஸ்ட் பவுலரான ஆண்டர்சன் அதிகபட்சமாக இங்கிலாந்து சார்பில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

46 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவருகிறது.          
 

click me!