
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் கடைசி ஓவரில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மும்பை வான்கடேவில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஜோஸ் பட்லரின் அதிரடி சதம் (116) மற்றும் சஞ்சு சாம்சனின் காட்டடி பேட்டிங் (19 பந்தில் 46 ரன்கள்) ஆகியவற்றால் 20 ஓவரில் 222 ரன்களை குவித்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.
223 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி கேபிடள்ஸ் அணி 18 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்திருந்த நிலையில் கடைசி 2 ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரை அருமையாக வீசிய பிரசித் கிருஷ்ணா அந்த ஓவரின் ரன்னே விட்டுக்கொடுக்கவில்லை. அதனால் கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 36 ரன்கள்(6 சிக்ஸர்) தேவைப்பட்டது. கடைசி ஓவரின் 3 பந்துகளிலும் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை விளாசி நம்பிக்கையளித்த ரோவ்மன் பவல், 4வது பந்தை சிக்ஸர் அடிக்க முடியவில்லை. அதனால் டெல்லி அணி தோற்றது.
கடைசி ஓவரின் 3வது பந்தை ஒபெட் மெக்காய் ஃபுல் டாஸாக வீசினார். அந்த ஃபுல்டாஸ் இடுப்புக்கு மேல் சென்றது. அதனால் அதற்கு கண்டிப்பாக நோ பால் தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அம்பயர் கொடுக்கவில்லை. இதையடுத்து, களத்தில் இருந்த டெல்லி கேபிடள்ஸ் வீரர்கள் ரோவ்மன் பவல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும் அம்பயரிடம் அது நோ பால் என வாதிட்டனர். பவலின் 3 சிக்ஸர்களால் உத்வேகமடைந்திருந்த டெல்லி கேபிடள்ஸ் கேப்டன், வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம், அம்பயர் நோ பால் கொடுக்காததால் கடும் ஆத்திரம் அடைந்தனர்.
டெல்லி கேப்டன் ரிஷப் பண்ட் களத்தில் இருந்த டெல்லி அணி வீரர்கள் பவல் மற்றும் குல்தீப்பை களத்தை விட்டு வெளியேறு வருமாறு பண்ட் அழைத்தார். அவருடன் இணைந்து ஷர்துல் தாகூரும் அதை செய்தார். இதற்கிடையே, டெல்லி அணி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே களத்திற்குள் நுழைந்து அம்பயர்கள் நிதின் மேனன், நிகில் பத்வர்தன் ஆகியோரிடம், தேர்டு அம்பயரிடம் கேட்குமாறு வலியுறுத்தினார். போட்டி நடந்துகொண்டிருக்கும்போது அத்துமீறி களத்திற்குள் நுழைவது தவறு.
ஐபிஎல் நடத்தை விதிகளை (2.7) மீறியதற்காக டெல்லி அணி உதவி பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரேவிற்கு போட்டி ஊதியம் முழுவதும் அபராதமாக விதிக்கப்பட்டதுடன், ஒரு போட்டியில் தடையும் விதிக்கப்பட்டது. கேப்டன் ரிஷப் பண்ட்டுக்கு போட்டி ஊதியம் முழுவதும் அபராதமாகவும், ஷர்துல் தாகூருக்கு 50 சதவிகித போட்டி ஊதியம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.
ஐபிஎல் நடத்தை விதி 2.7ன் படி, ரிஷப் பண்ட்டின் அத்துமீறிய செயலுக்கு போட்டி ஊதியம் முழுவதையும் அபராதமாக விதிக்கலாம் அல்லது 2 போட்டிகளில் ஆட தடை விதிக்கலாம். ரிஷப் பண்ட்டுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால் இந்த சீசனில் மீண்டும் இதேமாதிரியான விதிமீறலில் ஈடுபட்டால், குறைந்தது 2 போட்டி முதல், அதிகபட்சம் 8 போட்டிகள் வரை ரிஷப்புக்கு தடை விதிக்கப்படலாம். எனவே ரிஷப் பண்ட் இனிவரும் போட்டிகளில் மிகவும் சுதாரிப்பாக இருக்க வேண்டும்.