
ஐபிஎல் 15வது சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக இணைகின்றன. எனவே இந்த சீசனுக்கான ஏலம் மெகா ஏலமாக நடக்கவுள்ளது. வரும் 12-13 ஆகிய தேதிகளில் ஏலம் நடக்கவுள்ளது.
புதிய அணியான லக்னோ அணியை சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7090 கோடிக்கு வாங்கி, அந்த அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் என பெயர் சூட்டி, அணியின் லோகோவையும் வெளியிட்டுள்ளது. கேஎல் ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகிய மூவரையும் ஏலத்திற்கு எடுத்துள்ளது.
அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் குழுமம் ரூ.5625 கோடிக்கு வாங்கியது. ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய மூவரையும் ஏலத்திற்கு முன் எடுத்தது அகமதாபாத் அணி.
அகமதாபாத் அணிக்கு அகமதாபாத் டைட்டன்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அந்த பெயரை இப்போது குஜராத் டைட்டன்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரம் குஜராத் மாநிலத்தில் இருப்பதால், ஊர் பெயரை மட்டும் அடிப்படையாக கொண்டல்லாமல், மாநிலத்தின் பெயரை முன்னிறுத்தி குஜராத் டைட்டன்ஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.