
ஐபிஎல் 14வது சீசனில் இந்தியாவில் நடந்த முதல் பாகத்தில் கேகேஆர் அணி படுமோசமாக ஆடி தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் பின் தங்கியிருந்தது. ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவரும் 2வது பாகத்தில் அபாரமாக ஆடி ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி ஒருசார்பான வெற்றியை பதிவு செய்து, புள்ளி பட்டியலில் 4ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது கேகேஆர் அணி.
அதற்கு முக்கியமான காரணம், அந்த அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த இடது கை பேட்ஸ்மேனான வெங்கடேஷ் ஐயருக்கு ஐபிஎல் 14வது சீசனின் முதல் பாகத்தில் ஆடும் லெவனில் வாய்ப்பளிக்கப்படவில்லை. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் தொடர்ந்து சொதப்பிவந்த நிலையில், 2ம் பாகத்தில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. ஷுப்மன் கில்லுடன் தொடக்க வீரராக இறங்கிய ஐயர், 27 பந்தில் 41 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று கேகேஆர் அணியை வெற்றி பெற செய்தார்.
ஆர்சிபி பவுலர்கள் வீசிய பந்துகளை பறக்கவிட்ட வெங்கடேஷ் ஐயர், சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியிலும், சாம்பியன் பவுலர்களான டிரெண்ட் போல்ட், பும்ரா ஆகியோரின் பவுலிங்கை பொளந்துகட்டினார். தான் எதிர்கொண்ட போல்ட் மற்றும் மில்னே ஆகியோரின் முதல் பந்துகளை சிக்ஸருக்கு அனுப்பிய வெங்கடேஷ் ஐயர், பும்ராவின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். மும்பைக்கு எதிராக அடித்து ஆடி அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயர், 30 பந்தில் 53 ரன்களை விளாசி, 15.1 ஓவரிலேயே கேகேஆர் அணி வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
இதையும் படிங்க - https://tamil.asianetnews.com/sports-cricket/gautam-gambhir-regrets-for-not-pushing-suryakumar-yadav-to-3rd-batting-order-when-he-was-playing-under-him-for-kkr-in-ipl-qzxqo0
ஆக்ரோஷமான பயிற்சியாளர்(பிரண்டன் மெக்கல்லம்) மற்றும் ஆக்ரோஷமான கேப்டன்(மோர்கன்) ஆகிய இருவரின் கீழ் ஆடும் வெங்கடேஷ் ஐயர், ஆக்ரோஷமான அதிரடி பேட்டிங் ஆடி, எதிரணிகள் மீது முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தி கேகேஆர் அணி ஒருசார்பான வெற்றியை பெற காரணமாக திகழ்ந்துவருகிறார்.
அவரை பலரும் பல முன்னாள் இடது கை ஜாம்பவான் பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடுகின்றனர். வெங்கடேஷ் ஐயர், ஆடம் கில்கிறிஸ்ட்டை போன்று ஆடுவதாக மெக்கல்லம் தெரிவித்தார். இதேபோன்றும் பலரும் அவரை புகழ்ந்துவருகின்றனர்.
ஆனால் அவரோ தாதாவின் மிகப்பெரிய ரசிகராம். அவரை பார்த்துதான், வலது கையிலிருந்து இடது கை பேட்ஸ்மேனாகவே மாறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பேசிய வெங்கடேஷ் ஐயர், நான் ஐபிஎல்லில் ஆடும்போது முதல்முறையாக கேகேஆர் அணிக்காக ஆடவிரும்பினேன். அதற்கு முழு காரணம் சவுரவ் கங்குலி தான். அவர் கேகேஆர் அணியின் கேப்டனாக ஆரம்பத்தில் இருக்கிறார். எனவே கேகேஆர் அணிக்காகத்தான் ஆட விரும்பினேன். அதேபோலவே கேகேஆர் அணி என்னை எடுத்தபோது என் கனவு நனவானது.
இதையும் படிங்க - https://tamil.asianetnews.com/sports-cricket/kkr-captain-eoin-morgan-and-players-fined-for-slow-overrate-against-mumbai-indians-in-ipl-2021-qzxm9k
நான் தாதாவின் மிகப்பெரிய ரசிகன். உலகம் முழுதும் தாதாவுக்கு உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். தாதா என்னுடைய பேட்டிங்கில் மறைமுகமாக மிகப்பெரிய பங்கு வகிக்கிறார். நான் சிறுவயதில் வலது கை பேட்டிங் ஆடியவன். ஆனால் தாதாவின் பேட்டிங், அவர் அடிக்கும் சிக்ஸர்கள் ஆகியவற்றை பார்த்து அவரை போலவே ஆடவேண்டும் என்பதற்காகவே இடத்உ கை பேட்டிங்கிற்கு மாறினேன் என்று வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார்.