இந்தியா நெனச்சிருந்தா இலங்கை தொடரிலிருந்து விலகியிருக்கலாம்..! ஆனால் அவங்களுக்கு பயம் இல்ல - இன்சமாம் உல் ஹக்

By karthikeyan VFirst Published Jul 31, 2021, 6:11 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணி நினைத்திருந்தால் விலகியிருக்கலாம். ஆனால் இந்திய அணிக்கு தோல்வி பயம் இல்லாததால் அதை செய்யவில்லை என்று இன்சமாம் உல் ஹக் இந்திய அணியை பெருமையாக பேசியுள்ளார்.
 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வென்றது. ஆனால் டி20 தொடரில் தோல்வியடைந்தது. முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளிலும் தோற்றது. அதற்கு காரணம், இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் பலரும் ஆடாததுதான்.

2வது டி20 போட்டிக்கு முன்பாக க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதனால் அவருடன் தொடர்பில் இருந்த பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல் ஆகிய முக்கியமான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதால், அவர்கள் யாருமே கடைசி 2 டி20 போட்டிகளில் ஆடவில்லை.

ஆனாலும் அந்த தொடரிலிருந்து விலக விரும்பாத இந்திய அணி, இருக்கிற வீரர்களை வைத்து சமாளித்து ஆடியது. கடைசி 2 டி20 போட்டிகளில் 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் ஆடியது. ஆனால் அந்த 2 போட்டிகளிலும் தோற்று தொடரை இழந்தது இந்திய அணி.

முக்கியமான வீரர்கள் பலர் தனிமைப்படுத்தப்பட்டாலும், தொடரிலிருந்து விலகாமல் இந்திய அணி தொடர்ந்து ஆடியது குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் இந்திய அணியை பெருமையாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள இன்சமாம் உல் ஹக், இந்திய அணி கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டது. க்ருணல் பாண்டியாவுடன் மேலும் 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்திய அணி நினைத்திருந்தால் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலிருந்து எளிதாக விலகியிருக்க முடியும். ஆனால் இந்திய அணி அதை செய்யாமல் தொடர்ந்து விளையாடியது. இந்திய அணிக்கு தோல்வி பயம் இல்லை என்பதையே இது காட்டுகிறது. 

தோல்வியை கண்டு பயப்படவில்லை என்றால், வெற்றி தானாக வந்துசேரும். அணியில் இருக்கும் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணி ஆடியது. புவனேஷ்வர் குமார் 6ம் பேட்டிங் ஆர்டரில் ஆடினார். 6 பவுலர்கள், 5 பேட்ஸ்மேன்கள் என்ற காம்பினேஷனுடன் இந்திய அணி ஆடியது.

தற்போதைய இந்திய அணி மிக வலுவாக உள்ளது. மனதளவில், எப்பேர்ப்பட்ட சவால்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அண்யில் சில வீரர்கள் காயமடைந்துள்ளனர். இலங்கையில் 2வது டி20 போட்டியில் இந்திய அணி கடுமையாக போராடியது என்று இந்திய அணியை வெகுவாக பாராட்டியுள்ளார் இன்சமாம் உல் ஹக்.
 

click me!