திடீரென கிரிக்கெட்டை விட்டு விலகிய பென் ஸ்டோக்ஸ்..! இங்கிலாந்து அணிக்கு மரண அடி.. ரசிகர்கள் அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Jul 31, 2021, 3:16 PM IST
Highlights

தனது மனநிலை சரியில்லாத காரணத்தால் சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்கியிருக்க விரும்புவதாக கூறி, கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வை அறிவித்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
 

கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கொரோனா காலத்தில் கிரிக்கெட் வீரர்களின் மனவலிமை குறித்த விவாதம் தொடர்ச்சியாக நடந்துவருகிறது.

அந்தவகையில், இங்கிலாந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தனக்கு மனநிலை சரியில்லை என்று கூறி கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு அறிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தி இங்கிலாந்துக்கு தொடரை வென்று கொடுத்த பென் ஸ்டோக்ஸ், அதன்பிறகு நடந்த டி20 தொடரில் ஆடவில்லை.

அடுத்ததாக இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்குகிறது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இன்னும் ஒருசில தினங்களில் தொடங்கவுள்ள நிலையில், பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸின் ஆட்காட்டி விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. அந்த காயத்திலிருந்து இன்னும் மீளாத பென் ஸ்டோக்ஸ், தனது மனநிலை தற்போது சரியில்லை என்றும், அதனால் மனவலிமை பெற சிறிய ஓய்வு தேவைப்படுவதாக கூறி, தற்காலிகமாக கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்குவதாக அறிவித்துள்ளார்.

பென் ஸ்டோக்ஸின் இந்த முடிவு அவரது தனிப்பட்ட முடிவு என்றாலும், அவரது இந்த திடீர் முடிவு இங்கிலாந்து அணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், டி20 உலக கோப்பை, ஆஷஸ் தொடர் என அடுத்தடுத்து முக்கியமான கிரிக்கெட் தொடர்கள் இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் மேட்ச் வின்னரும், நட்சத்திர ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டை விட்டு ஒதுங்கியிருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. 
 

click me!