தவானோட மோசமான கேப்டன்சி தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம்..! டேனிஷ் கனேரியா கடும் விளாசல்

By karthikeyan VFirst Published Jul 30, 2021, 8:14 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி தொடரையும் இழந்தது. அந்த தோல்விக்கு இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவானின் மோசமான கேப்டன்சி தான் காரணம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.
 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, டி20 தொடரை இழந்தது. முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, அடுத்த 2 போட்டிகளிலும் தோற்றது. அதற்கு முக்கிய காரணம், கொரோனா அச்சுறுத்தலால் முக்கியமான வீரர்கள் ஆடமுடியாமல்போனது தான்.

2வது டி20 போட்டிக்கு முன்பாக க்ருணல் பாண்டியாவுக்கு கொரோனா உறுதியானதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்த சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா, சாஹல், தீபக் சாஹர் ஆகிய முக்கியமான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டதால், கடைசி 2 போட்டிகளில் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்கள் என்ற காம்பினேஷனுடன் ஆடியது. அதனால் பேட்டிங் ஆர்டர் வலுவற்று இருந்ததால், 2 போட்டிகளிலும் மோசமான பேட்டிங்கால் தான் இந்திய அணி தோற்றது.

கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 81 ரன்கள் மட்டுமே அடித்தது. 82 ரன்கள் என்ற இலக்கை இலங்கை அணி 15வது ஓவரிலேயே அடித்து வெற்றி பெற்றுவிட்டது. இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த தோல்விக்கு இந்திய அணி கேப்டன் தவானின் தவறான கேப்டன்சி முடிவுதான் காரணம் என்று டேனிஷ் கனேரியா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள டேனிஷ் கனேரியா, நிறைய பவுலர்களை பெற்றிருந்த இந்திய அணி, பவுலிங் பலத்தை பயன்படுத்தி, முதலில் பந்துவீசி இலங்கையை குறைந்த ரன்னுக்கு சுருட்டுவதை விடுத்து முதலில் பேட்டிங் ஆடியது பெரிய தவறு. அது கேப்டன் தவானின் மோசமான கேப்டன்சியை காட்டுகிறது. 

இலங்கை பவுலர் ஹசரங்கா அருமையாக பந்துவீசினார். இந்திய வீரர்கள் மோசமான ஷாட்டுகளை ஆடினர். இந்திய பேட்டிங் ஆர்டரை ஹசரங்கா சரித்தார். அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நம்பர் 2 பவுலராக இருப்பது ஏன் என்பதை நிரூபித்தார்.  ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் அவர்களது விக்கெட்டுகளை எளிதாக விட்டுக்கொடுத்தனர் என்றே நான் நினைக்கிறேன். அவரை கவனமாக ஆடியிருந்தால், இந்திய அணி 130-140 ரன்கள் அடித்திருக்கும் என்று டேனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார்.
 

click me!