கடைசி நேரத்தில் காலை வாரிய கம்மின்ஸ்!! ஆஸ்திரேலிய அணிக்கு எளிய இலக்கு

By karthikeyan VFirst Published Mar 5, 2019, 5:05 PM IST
Highlights

கோலி நேராக அடித்த பந்து பவுலர் ஆடம் ஸாம்பாவின் கையில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. அப்போது கிரீஸை விட்டு வெளியே வந்திருந்த விஜய் சங்கரால் கிரீஸை தொட முடியாததால் ரன் அவுட்டானார். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

தொடக்க வீரர் ரோஹித் சர்மா முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் தவானுடன் கோலி ஜோடி சேர்ந்தார். கோலி - தவான் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்துவந்தது. பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்ற இந்த ஜோடியை மேக்ஸ்வெல் பிரித்தார். 29 பந்துகளில் 21 ரன்கள் அடித்திருந்த தவானை மேக்ஸ்வெல் வீழ்த்தினார். 9வது ஓவரிலேயே தவான் அவுட்டாகிவிட்டதால் ராயுடு களத்திற்கு வந்தார். 

பெரிய இன்னிங்ஸ் ஆட கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாத ராயுடு, 18 ரன்களில் நாதன் லயன் பவுலிங்கில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அதன்பிறகு கோலியுடன் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர், இந்த வாய்ப்பையும் நன்றாக பயன்படுத்தி கொண்டார். கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிவந்தார். சிங்கிள் ரொடேட் செய்து சிறப்பாக ஆடிய விஜய் சங்கர், அவ்வப்போது சில பவுண்டரிகளை விளாசினார். ஒரு சிக்ஸரும் அடித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த விஜய் சங்கர், துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். 

கோலி நேராக அடித்த பந்து பவுலர் ஆடம் ஸாம்பாவின் கையில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. அப்போது கிரீஸை விட்டு வெளியே வந்திருந்த விஜய் சங்கரால் கிரீஸை தொட முடியாததால் ரன் அவுட்டானார். சிறப்பாக ஆடிய விஜய் சங்கர், 41 பந்துகளில் 46 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின்னர் கேதர் ஜாதவ் அவசரப்பட்டு ஸாம்பாவின் சுழலில் ஃபின்ச்சிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்களில் வெளியேற, அதற்கு அடுத்த பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறினார் தோனி. 

இதையடுத்து கோலியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். கோலிக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய ஜடேஜா, 40 பந்துகளில் 21 ரன்கள் அடித்து கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 40வது சதத்தை பூர்த்தி செய்தார். 107 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார் கோலி. 

சதத்திற்கு பிறகு அடித்து ஆடி முடிந்தவரை ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த விராட் கோலி, சதத்திற்கு பிறகு பெரிதாக ரன்களை குவிக்கவில்லை. கம்மின்ஸ் வீசிய 48வது ஓவரின் முதல் பந்தில் கோலியை 116 ரன்களில் வீழ்த்தினார். கோலியை அடுத்து அதே ஓவரில் குல்தீப் யாதவும் கிளீன் போல்டாகி வெளியேற, குல்ட்டர்நைல் வீசிய அடுத்த ஓவரில் பும்ரா போல்டானார். இதையடுத்து இந்திய அணி 250 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 

நாக்பூர் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் குறைந்தது 300 ரன்களுக்கு மேல் அடித்தால்தான் வெற்றி வசப்படும். ஏனெனில் அங்கு முதல் பேட்டிங் சராசரி ஸ்கோரே 292. எனினும் இந்திய அணியில் பும்ரா, ஷமி, குல்தீப், ஜடேஜா என சிறந்த பவுலிங் யூனிட்டை இந்திய அணி பெற்றிருப்பதால், ஆஸ்திரேலிய அணியை சுருட்டுவதற்கான வாய்ப்பும் உள்ளது. என்ன நடக்கிறது என பார்ப்போம். ஆஸ்திரேலிய அணியின் சார்பில் கம்மின்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோஹித், கோலி ஆகிய முக்கிய விக்கெட்டுகள் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் கம்மின்ஸ். கடைசி நேரத்தில் ஜடேஜா, கோலி, குல்தீப் ஆகிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

click me!