டி20 கிரிக்கெட் வரலாற்றில் சூப்பர் ஓவரில் இந்தியா படைத்த அபார சாதனை

By karthikeyan VFirst Published Jan 30, 2020, 1:27 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான மூன்றாவது டி20 போட்டி கடைசி பந்தில் டை ஆனதை அடுத்து, சூப்பர் ஓவரில் ரோஹித் சர்மாவின் அபாரமான பேட்டிங்கால் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3வது டி20 போட்டி ஹாமில்டனில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 179 ரன்கள் அடித்தது. 180 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவை. ஷமி வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்ஸர் அடித்த டெய்லர், இரண்டாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். 47 பந்தில் 95 ரன்களை குவித்திருந்த வில்லியம்சன், கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் எஞ்சிய 3 பந்தில் வெறும் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அதை நியூசிலாந்து வீரர்களால் எடுக்க முடியவில்லை. கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில், ஷமியின் பந்தில் அவுட்டானார் டெய்லர்.

Also Read - அடுத்த போட்டியில் அவங்க 2 பேரும் ஆடுவாங்க.. 3வது டி20 முடிந்ததுமே அதிரடியாக அறிவித்த கேப்டன் கோலி

போட்டி டையில் முடிந்ததையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்களை குவித்தது. சூப்பர் ஓவரில் 18 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்ட இந்திய அணியின் சார்பில் ரோஹித்தும் ராகுலும் களத்திற்கு வந்தனர். முதல் 4 பந்தில் வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்தனர். அதனால் கடைசி 2 பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. ரோஹித் சர்மா கடைசி 2 பந்திலும் 2 சிக்ஸர்களை விளாசி இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

இந்த த்ரில் வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என டி20 தொடரை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் அபார சாதனை ஒன்றை படைத்துள்ளது. சூப்பர் ஓவரில் 18 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி, விக்கெட் இழப்பின்றி 20 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சிறந்த சாதனையை படைத்துள்ளது. அதாவது, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில், சேஸிங் அணியின் சிறந்த ஸ்கோர் இதுதான். விக்கெட் இழப்பின்றி சூப்பர் ஒவரில் இந்திய அணி அடித்த 20 ரன்கள் தான் டி20 சூப்பர் ஓவரின் சிறந்த சேஸிங் ஸ்கோர். 

Also Read - அது மட்டும் நடக்காம இருந்திருந்தா சூப்பர் ஓவரில் நான் பேட்டிங் ஆடியிருக்கமாட்டேன்.. அவருதான் ஆடியிருப்பாரு - ரோஹித் சர்மா

இவ்வளவுக்கும் இதுதான் இந்திய அணி, டி20 கிரிக்கெட்டில் ஆடிய முதல் சூப்பர் ஓவர். இதற்கு முன்னர் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் சூப்பர் ஓவரில் ஆடியதே கிடையாது. முதல் சூப்பர் ஓவரிலேயே சாதனையை படைத்து அசத்தியுள்ளது இந்திய அணி. 
 

click me!