நாங்க அதை பத்தியெல்லாம் கவலையே படல.. இலங்கையை வீழ்த்திட்டு செம கெத்தா பேசிய கேப்டன் கோலி

By karthikeyan VFirst Published Jul 7, 2019, 11:24 AM IST
Highlights

லீக் சுற்றின் கடைசி இரண்டு போட்டிகளில் ஒன்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளும் மற்றொன்றில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் மோதின. 
 

உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நேற்றுடன் முடிவடைந்தது. அரையிறுதி போட்டிகள் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. 

லீக் சுற்றின் கடைசி இரண்டு போட்டிகளில் ஒன்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளும் மற்றொன்றில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளும் மோதின. 

இந்த போட்டிகளுக்கு முன்னதாக அரையிறுதியில் ஆடும் அணிகள் உறுதியாகிவிட்ட போதிலும், இந்த போட்டிகள் தான் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் பிடிக்கப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் போட்டிகளாக அமைந்ததால் இதன் மீதான எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்களுக்கு அதிகமாக இருந்தது. 

இந்த போட்டிகளுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடன் முதலிடத்திலும் இந்திய அணி 13 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் இருந்தன. இந்திய அணி இலங்கையை வீழ்த்தி, அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவிடம் தோற்றால், இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க முடியும் என்ற நிலை இருந்தது. 

அதேபோலவே இந்திய அணி இலங்கையை வீழ்த்தி, தென்னாப்பிரிக்காவிடம் ஆஸ்திரேலிய அணி தோற்றதால் இந்திய அணி 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. 

ஏன் இந்த முதலிடத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் என்றால், அரையிறுதியில் முதலிடத்தில் இருக்கும் அணியும் நான்காமிடத்தில் இருக்கும் அணியும் மோதும். மற்றொரு அரையிறுதி போட்டியில் இரண்டாம் மற்றும் மூன்றாமிடத்தில் இருக்கும் அணிகள் மோதும். 

அந்தவகையில், இந்திய அணி அரையிறுதியில், இங்கிலாந்தை எதிர்கொள்வதை விட நியூசிலாந்தை எதிர்கொள்வதே நல்லது. ஏனெனில் இங்கிலாந்து வலுவான அணி என்பதால், நியூசிலாந்தை எதிர்கொண்டால் இந்திய அணிக்கு இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாகும் என்பதால் அதைத்தான் இந்திய அணி விரும்பும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதற்கு பின்னர் தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸே அப்படித்தான் தெரிவித்தார். எங்கள் வெற்றி இந்திய அணியை மகிழ்ச்சியடைய செய்திருக்கும் என்றார். 

ஆனால் உண்மையாகவே இந்திய அணி அப்படி விரும்பியதா என்றால் இல்லை. இலங்கைக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, எதிரணி எது என்பதை பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. ஏனெனில் எதிரணி எதுவாக இருந்தாலும் நாங்கள் நன்றாக ஆடினால் வெற்றி பெறலாம். நாங்கள் நன்றாக ஆடவில்லையெனில் எதிரணி வெற்றி பெறும். அதனால் நாங்கள் நன்றாக ஆடுவதுதான் முக்கியமே தவிர எதிரணி எது என்பதல்ல என்று கெத்தாக பதிலளித்தார் கோலி. 

இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்வதை விட நியூசிலாந்தை எதிர்கொள்வது நல்லது என நினைத்ததோ இல்லையோ தெரியவில்லை. ஆனால் அது நடக்கவில்லை. இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டி வரும் 9ம் தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கவுள்ளது. 
 

click me!