நாங்க ஜெயிச்சதுக்கு இந்தியா செம ஹேப்பியா இருப்பாங்க - தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ்

By karthikeyan VFirst Published Jul 7, 2019, 10:46 AM IST
Highlights

இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. மூன்றாமிடத்தில் இங்கிலாந்து அணியும் நான்காமிடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளன

உலக கோப்பை தொடரின் லீக் சுற்று நேற்றுடன் முடிந்தது. லீக் சுற்றின் கடைசி நாளில் 2 போட்டிகள் நடந்தன. அதில் ஒரு போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

மான்செஸ்டரில் நடந்த மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி 325 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணியை 315 ரன்களுக்கு சுருட்டி 10 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி. 

இந்திய அணி இலங்கையை வீழ்த்தி 15 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு சென்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருந்தால் 16 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்திருக்கும். ஆனால் தோற்றுவிட்டதால் இரண்டாவது இடத்திற்கு பின் தங்கிவிட்டது. 

இந்திய அணி 15 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஆஸ்திரேலிய அணி 14 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. மூன்றாமிடத்தில் இங்கிலாந்து அணியும் நான்காமிடத்தில் நியூசிலாந்து அணியும் உள்ளன. அரையிறுதி போட்டி முதலிடத்தில் இருக்கும் அணிக்கும் நான்காமிடத்தில் இருக்கும் அணிக்கும் இடையே நடக்கும் என்பதால், இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்தை மான்செஸ்டாரில் எதிர்கொள்ளவுள்ளது. 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்னர் பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ், நாங்கள் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி வெற்றி பெற்றதையடுத்து இந்திய அணி மகிழ்ச்சியாக இருக்கும் என்று கருதுகிறேன். நியூசிலாந்து அணி கடைசி 3 ஆட்டங்களில் சொதப்பியுள்ளது. அதனால் நியூசிலாந்தை அரையிறுதியில் எதிர்கொள்வதை நினைத்து இந்திய அணி மகிழ்ச்சியாக இருக்கும். இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் என்று நினைப்பதாக டுப்ளெசிஸ் தெரிவித்துள்ளார். 

இந்த உலக கோப்பையை நியூசிலாந்து அணி அபாரமாக தொடங்கினாலும் பிற்பாதியில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்தது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டதால் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியை பார்க்கமுடியாமல் போனது. இந்நிலையில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. 
 

click me!