#ENGvsIND நாங்க தோற்றதற்கு அவங்க தான் காரணம்..! இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Aug 28, 2021, 10:19 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணத்தை கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஆனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அருமையாக பேட்டிங் ஆடி 432 ரன்களை குவித்தது. 354 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 3ம் நாள் ஆட்டம் முழுவதும் பேட்டிங் ஆடி, 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்களை குவித்திருந்தது. 2வது இன்னிங்ஸில் இந்திய அணி பெரிய ஸ்கோர் அடித்து இந்த போட்டியில் இங்கிலாந்துக்கு கடும் சவாலளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனிலேயே எஞ்சிய 8 விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுமே மோசமாக இருந்தது. அதற்கு நேர்மாறாக இங்கிலாந்து அணியின் பேட்டிங், பவுலிங் இரண்டுமே சிறப்பாக இருந்தது.

இங்கிலாந்து அணியின் ஃபாஸ்ட் பவுலர்களான ஆண்டர்சன், ஓவர்டன், ராபின்சன் ஆகிய மூவருமே 2 இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியை பொட்டளம் கட்டினர். குறிப்பாக, 4ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் மிகச்சரியான லைன் & லெந்த்தில் வீசி இந்திய வீரர்களை ஆடவைத்து வீழ்த்தினர்.

இந்நிலையில், தோல்விக்கு பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தங்களின் தோல்விக்கு இங்கிலாந்து அணியின் சிறப்பான பவுலிங் தான் காரணம் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஸ்கோர்போர்டு அழுத்தம் எங்கள் மீது இருந்தது. அதையும் எதிர்கொண்டு 2வது இன்னிங்ஸில் சில நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்தது. ஆனால் இங்கிலாந்து பவுலர்கள் இன்றைய ஆட்டத்தின்(4ம் நாள்) முதல் செசனில் அருமையாக பந்துவீசினர். இங்கிலாந்து பவுலர்களின் சிறப்பான பவுலிங்கை நாங்கள் சரியான முறையில் எதிர்கொள்ளவில்லை. அதுதான் தோல்விக்கு காரணம் என்று விராட் கோலி தெரிவித்தார்.
 

click me!