எல்லாம் தாதாவோட டீம்கிட்ட இருந்து கத்துகிட்டதுதாங்க.. அவரு போட்ட பாதையில போயிட்டு இருக்கோம்.. கோலி புகழாரம்

By karthikeyan VFirst Published Nov 24, 2019, 6:23 PM IST
Highlights

இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் அதிகமான வெற்றிகளை குவித்து கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக திகழும் விராட் கோலி, முன்னாள் கேப்டன் கங்குலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலோச்சுகிறது. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டுகளிலும் வெற்றிகளை குவித்து நம்பர் 1 அணியாக கெத்தாக வலம்வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்ற இந்திய அணி, இந்தியாவில் வைத்து தென்னாப்பிரிக்காவையும், அதைத்தொடர்ந்து தற்போது வங்கதேசத்தையும் ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது. 

இந்த மூன்று தொடர்களிலும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் வங்கதேசத்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் என தொடர்ச்சியாக மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. 

இந்திய அணிக்கு அதிகமான வெற்றிகளை குவித்து கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக கோலி திகழ்கிறார். கோலி தலைமையில் இந்திய அணி பல சாதனைகளை படைத்துவருகிறது. வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதன்முறையாக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆடிய இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் அபார வெற்றி பெற்றது. 

போட்டிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி, டெஸ்ட் கிரிக்கெட் என்பது மனரீதியான போராட்டம். டெஸ்ட் கிரிக்கெட்டை அணுகும் முறையையும் ஆதிக்கம் செலுத்துவதையும் தாதா தலைமையிலான அணியிடமிருந்துதான் கற்றுக்கொண்டோம். தாதா தலைமையிலான அணிதான் எங்களுக்கு முன்னோடி. அவர் காட்டிய வழியில் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று கோலி தெரிவித்தார். 

கங்குலி தலைமையிலான இந்திய அணியில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், லட்சுமணன், அனில் கும்ப்ளே ஆகிய லெஜண்ட் வீரர்கள் ஆடினர். அந்த காலக்கட்டத்தில் கங்குலி தலைமையிலான அந்த இந்திய அணி சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தியது. அப்போது எதிரணிகளுக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியையே இந்திய அணி ஓடவிட்டது குறிப்பிடத்தக்கது. 
 

click me!