Asianet Exclusive: இந்திய வம்சாவளி நியூசிலாந்து கிரிக்கெட்டர் ராச்சினின் தந்தை ரவீந்திராவின் பிரத்யேக பேட்டி

By karthikeyan VFirst Published Dec 12, 2021, 8:55 PM IST
Highlights

ஏசியாநெட் குழுமத்தை சேர்ந்த கன்னடா பிரபா இணையதளத்திற்கு இந்தியா வம்சாவளி நியூசிலாந்து கிரிக்கெட் வீரரான ராச்சினின் தந்தை ரவீந்திரா அளித்த பிரத்யேக பேட்டியை பார்ப்போம்.
 

இந்திய வம்சாவழியை சேர்ந்த நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ராச்சின் ரவீந்திரா. இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில், 91 பந்துகள் பேட்டிங் ஆடி, இந்திய அணியை கடைசி விக்கெட்டை வீழ்த்த விடாமல் தடுத்து அந்த டெஸ்ட்டை டிரா செய்ய உதவியவர் ராச்சின் ரவீந்திரா. அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே இந்தியாவின் வெற்றியை தடுத்து, தனது அணியை(நியூசிலாந்து) தோல்வியிலிருந்து மீட்டெடுத்தவர் ராச்சின்.

ராச்சின் ரவீந்திராவின் தந்தை ரவீந்திரா கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாயார் தீபா ஆகியோர் பெங்களூருவை சேர்ந்தவர்கள். 1990களில் பெங்களூருவிலிருந்து நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனுக்கு குடிபெயர்ந்தவர்கள். சிறுவயது முதலே கிரிக்கெட்டில் ஆர்வம் மிகுந்த ராச்சின் ரவீந்திரா, உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் மொத்தமாக 2000க்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார்; 50க்கும் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

ராச்சின் ரவீந்திராவின் தந்தை, இந்திய லெஜண்ட் கிரிக்கெட்டர்களான ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய இருவரின் மிகப்பெரிய ரசிகர் என்பதால், அவர்கள் இருவரின் பெயர்களையும் சேர்த்து ராச்சின் என பெயர் சூட்டியுள்ளார். இந்திய வம்சாவளி வீரரான ராச்சின் ரவீந்திரா, இந்தியாவுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே போட்டியின் முடிவையே மாற்றியமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 

இந்நிலையில், ஏசியாநெட் குழுமத்தின் கன்னட பிரபாவிற்கு ராச்சினின் தந்தை ரவீந்திரா அளித்த பிரத்யேக பேட்டியை பார்ப்போம்.

உங்கள் குடும்பம், பூர்வீகம் மற்றும் கிரிக்கெட் ஆர்வம் குறித்து சொல்லுங்க

நான் பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவன். என் மனைவியும் பெங்களூருவை சேர்ந்தவர். என் பெற்றோர் மற்றும் எனது மனைவியின் பெற்றோர் பெங்களூருவை சேர்ந்தவர்கள். எங்கள் உறவினர்கள் பெங்களூருவில் தான் இருக்கிறார்கள். நான் இந்திய பாரம்பரியத்தை சேர்ந்தவன் என்பதில் பெருமைப்படும் அதேவேளையில், நியூசிலாந்தை என் நெஞ்சில் சுமப்பவன். இந்தியாவில் உள்ள பெரும்பாலானோரை போல கிரிக்கெட்டை பெரிதும் கொண்டாடும் குடும்பத்தை சேர்ந்தவன். நான் பெங்களூருவிலும், நியூசிலாந்திலும் கிரிக்கெட் ஆடியிருக்கிறேன். 

நியூசிலாந்துக்கு எப்படி குடிபெயர்ந்தீர்கள்? அங்கு செட்டில் ஆகவைத்தது எது?

நியூசிலாந்து சிறந்த இடம். உலகின் மிகச்சிறந்த இடங்களில் ஒன்று நியூசிலாந்து. அனைவரும் நட்புடன் பழக்கூடியவர்கள். நாங்கள் வசிக்கும் வெலிங்டன் நகரம், 1980களில் இருந்த பெங்களூருவை போன்றது. குழந்தைகள் வளர்வதற்கு ஏற்ற சிறந்த இடம் வெலிங்டன்.

ராகுல் மற்றும் சச்சின் என்ற பெயர்களிலிருந்து தான் ராச்சின் வைக்கப்பட்டதாக அறிகிறோம். அப்படியா?

ஆம்.. ஆனால் அது என்னுடைய ஐடியா இல்லை. என் மனைவியின் ஐடியா. ஆனால் அவர்(ரவீந்திராவின் மனைவி) உண்மையாகவே அப்படி யோசித்துத்தான் அந்த பெயரை வைத்தாரா என்று தெரியவில்லை. அதைப்பற்றி நாங்கள் பெரிதாக சிந்தித்ததோ பேசியதோ இல்லை. தீபா அந்த பெயரை சொன்னார். பெயர் நன்றாக இருந்ததால் அதை வைத்துவிட்டோம். ஆனால் காலப்போக்கில் இருபெரும் வீரர்களின் பெயர்களின் கலவையாக அந்த பெயர் பிரதிபலிக்கப்பட்டது. அதை நாங்களும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டோம்.

ராச்சின் கிரிக்கெட்டை எப்படி தொடங்கினார்? அவரை எந்த விஷயம் கிரிக்கெட் மீது ஆர்வம் காட்டவைத்தது? 

நான் மிகப்பெரிய கிரிக்கெட் ரசிகன். எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் கிரிக்கெட் ஆடுவேன்; பார்ப்பேன். என்(ரவீந்திரா) மனைவி தீபாவும் கிரிக்கெட் ரசிகை. நாங்கள் டிவியில் கிரிக்கெட் பார்ப்பது வழக்கம். அதுதான் ராச்சினின் கிரிக்கெட் ஆர்வத்திற்கு காரணம். ராச்சினின் சிறுவயதில் இதயத்தில் சிறிய பிரச்னை இருந்தது. இதயத்தில் சிறிய ஓட்டை இருந்தது. ஆனால் அது அடைக்கப்பட்டது.  அந்த சமயத்தில் மருத்துவர்களிடம், நான் இனிமேல் எந்த பிரச்னையும் இல்லாமல் கிரிக்கெட் ஆடலாமா என ராச்சின் கேட்டான். அது எங்களுக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணம்.


 
ராச்சின் கிரிக்கெட்டராக நீங்கள் எந்தவகையில் உதவுனீர்கள்?

ராச்சினின் கடும் உழைப்பால் கிடைத்த இடத்திற்கான கிரெடிட்டை நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அவருக்கு நான் பயிற்சியளித்தேன்; ஆதரவளித்தேன். ஆனால் உழைப்பு முழுவதும் அவருடையது. அவருக்கு கற்றுக்கொடுத்த அதேவேளையில், அவரிடம் இருந்து நானும் கற்றுக்கொண்டேன். என்(ரவீந்திரா) மனைவி தீபாவும் மகனுக்கு ஆதரவாக இருந்தார். வெலிங்டன் குளிரில், தினமும் காலை 5 மணிக்கு எழுந்து ராச்சினை பயிற்சிக்கு தயார்படுத்தினார். படிப்புக்கு இடையே கிரிக்கெட்டுக்காக தீவிரமாக தயாரானார். ஜே அருண் குமார், ஸ்ரீதரன் ஸ்ரீராம், சையத் ஷஹாபுதீன், ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராச்சினின் வளர்ச்சிக்கு உதவியவர்கள். 

ராச்சின் அவரது சொந்த நாட்டிற்கு(இந்தியா) எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானது உங்களுக்கு எப்படி இருந்தது?

எந்த வீரருக்கும் அவரது நாட்டிற்காக ஆடுவதே பெரிய பாக்கியம் தான். ராச்சின் இதுவரை சாதித்ததே எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. மிக வலுவான இந்திய அணிக்கு எதிராக, அதுவும் இந்தியாவிலேயே ராச்சின் அறிமுகமானது, பார்க்க அருமையாக இருந்தது. 

உங்களுக்கு மிகவும் பிடித்த ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடி ராச்சின் போட்டியை டிரா செய்த தருணம் பற்றி பகிருங்கள்.

அது என்றென்றைக்குமே மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வு. இந்திய மண்ணில் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்டை டிரா செய்வது சாதாரண விஷயம் அல்ல. இதேமாதிரி பல போட்டிகளில் தனது அணியை காப்பாற்றிய ராகுல் டிராவிட்டை போலவே, அவரது பயிற்சியில் ஆடும் அணிக்கு எதிரான டெஸ்ட்டில் ராச்சினால் அதை செய்யமுடிந்தது என்பது சிறப்பானது. ராச்சினுக்கு மிகவும் பிடித்தமான வீரரான ராகுல் டிராவிட்டை போலவே, இதேமாதிரி இன்னும் பல போட்டிகளில் சிறப்பாக ஆடுவார் என்பதில் சந்தேகமேயில்லை. 

ஐபிஎல்லில் ராச்சின் ஆடுவாரா? ஏலத்தில் கலந்துகொள்ளும் திட்டம் உள்ளதா? 

இப்போதைக்கு, அவர் டெஸ்ட்டில் அறிமுகமாகியிருக்கிறார். இன்னும் நிறைய பயணிக்க வேண்டியிருக்கிறது. ஒரு சமயத்தில் ஒரு ஆட்டத்தை பற்றி மட்டுமே சிந்தித்து, வளர வேண்டும். ஐபிஎல் உலகின் மிகப்பெரிய டி20 லீக். எனவே ஒவ்வொரு கிரிக்கெட் வீரருமே ஐபிஎல்லில் ஆட விரும்புவார். ஐபிஎல்லில் விளையாட கடுமையாக உழைக்க வேண்டும். நிறைய பாக்ஸ்களை டிக் செய்ய வேண்டும். அப்படி, அனைத்து பாக்ஸ்களையும் அவர் டிக் செய்துவிட்டால் ஐபிஎல்லில் ஆடலாம். அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் ஆடுவார்.

ராச்சினுக்கு மிகவும் பிடித்த, அவர் முன்னோடியாக கருதும் கிரிக்கெட் வீரர்கள் யார்?

ராச்சின் நிறைய சிறந்த வீரர்களை பார்த்து வளர்ந்தார். சச்சின் மற்றும் ராகுல் டிராவிட் முதன்மையானவர்கள். அவர்கள் தவிர பாண்டிங், லாரா, ஹைடன், இன்சமாம் என நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஆடிய காலக்கட்டம் தான் கிரிக்கெட்டின் சிறந்த காலக்கட்டம். பேட்டிங்கை பொறுத்தமட்டில் சச்சின், டிராவிட் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகிய மூவர் தான் ராச்சினுக்கு பிடித்தவர்கள். பவுலிங்கில் டிரெண்ட் போல்ட் மற்றும் டேனியல் வெட்டோரி.

(ஏசியாநெட் குழுமத்தை சேர்ந்த கன்னட பிரபாவின் எக்ஸிகியூடிவ் எடிட்டர் - ரவிசங்கர் கே பட்)
 

click me!