இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூர் தனது திருமண நிகழ்ச்சியின் போது சிறுவனுக்கு போட்டியாக டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் பிறந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்கூர். தற்போது 31 வயதாகும் இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலமாக ஒரு நாள் தொடரில் அறிமுகமானார். இதே போன்று 2018 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 தொடரில் அறிமுகமானார்.
அதன் பிறகு டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். இந்த ஆண்டு இந்தியா வந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம் பெற்றிருந்த ஷர்துல் தாக்கூர், முதல் ஒரு நாள் போட்டியில் 2 விக்கெட்டும், 2ஆவது போட்டியில் 1 விக்கெட்டும், 3ஆவது போட்டியில் 3 விக்கெட்டும் கைப்பற்றினார். அதன் பிறகு தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் ஷர்துல் தாக்கூர் பங்கேற்கவில்லை.
இந்த ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் திருமணம் செய்து வருகின்றனர். ஏற்கனவே கேஎல் ராகுல் - அதியா ஷெட்டி, அக்ஷர் படேல் - மேகா மற்றும் ஹர்திக் பாண்டியா - நடாசா ஸ்டான்கோவிச் ஆகியோர் திருமணம் செய்து கொண்டனர். அந்த வரிசையில் தற்போது ஷர்துல் தாக்கூரும் இணைந்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி ஷர்துல் தாக்கூருக்கும், மித்தாலி பருல்கருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து திருமணம் நடக்க இருந்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்திற்கு அவர்களது திருமணம் இன்றைய தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று ஷர்துல் தாக்கூர் மற்றும் மித்தாலி பருல்கர் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு முன்னதாக நடந்த ஹல்தி மற்றும் சங்கீத நிகழ்ச்சியில் ஷர்துல் தாக்கூர் டான்ஸ் ஆடியுள்ளார். சிறுவனுக்கு போட்டியாக ஷர்துல் தாக்கூர் டான்ஸ் ஆடிய வீடியோ தான் தற்போது டாப் டிரெண்டாகி வருகிறது. அதுமட்டுமின்றி, Soniyo என்ற பாலிவுட் பாடலின் ஒரு சில வரிகளை தனது குரலில் பாடியுள்ளார்.
இந்த திருமணத்தைத் தொடர்ந்து வரும் மார்ச் 17 ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. இதில், ஷர்துல் தாக்கூர் இடம் பெற்றுள்ளதால் ஹனிமூன் செல்வதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.