தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி, ஒரு டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று இந்திய மகளிர் அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து தற்போது இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி அதிரடியாக விளையாடினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 292 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 161 பந்துகளில் 27 பவுண்டரி ஒரு சிக்ஸர் உள்பட 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதற்கு முன்னதாக ஸ்மிருதி மந்தனா ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசி சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில் தான் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா இந்த போட்டியில் சதம் விளாசியிருந்த நிலையில் அதனை இரட்டை சதமாக மாற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் விளாசிய முதல் பெண் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை ஷஃபாலி வர்மா படைத்துள்ளார். அவர், 197 பந்துகளில் 23 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் உள்பட 205 ரன்கள் குவித்து ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்துள்ளார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணியானது 98 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 525 ரன்கள் குவித்திருந்தது. இதில், ஷுப் சதீஷ் 15 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெமீமா ரோட்ரிக்ஸ் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்மன்ப்ரீத் கவுர் 42 ரன்களும், ரிச்சா கோஷ் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இருவரும் 2ஆம் நாள் போட்டியை தொடங்கினர். இதில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மேலும், ரிச்சா கோஷ் 86 ரன்கள் குவித்தார். கடைசியில் வந்த தீப்தி சர்மா 2 ரன்களுடன் களத்தில் நிற்கவே இந்திய மகளிர் அணியானது 115.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது. இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணியானது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.