தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டி உத்தரப்பிரதேசத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்துள்ளனர்.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு பார்படோஸில் நடைபெறுகிறது. இந்தியா 3ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு வந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. இன்று நடைபெறும் போட்டியானது மழையால் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றைய போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் போட்டியானது நாளைக்கு ஒத்தி வைக்கப்படும்.
இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி ரசிகர்கள் கோயில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். அதில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோயிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்து ரசிகர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக முதல் முறையாக கடந்த 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையிடம் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது.