தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய மகளிர் அணியானது 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா வந்த தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், ஒரு டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்று கைப்பற்றியது. இதையடுத்து ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் நடைபெற்றது. இதில், முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணியானது ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் அபாரமான பேட்டிங்கால் 6 விக்கெட்டுகளை இழந்து 603 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
இதில், ஷஃபாலி வர்மா 205 ரன்கள் குவித்தார். ஸ்மிருதி மந்தனா 149 ரன்கள் எடுத்தார். பின்னர், தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. இதில், தென் ஆப்பிரிக்கா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 266 ரன்கள் எடுத்தது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய மகளிர் அணியில் சினே ராணா 8 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.
இதையடுத்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு பாலோ ஆன் கொடுக்கப்பட்டது. பாலோ ஆன் தவிர்க்க கடுமையாக போராடிய தென் ஆப்பிரிக்கா மகளிர் அணியானது 2ஆவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 373 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய மகளிர் அணிக்கு 37 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய மகளிர் அணியானது 9.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக டெஸ்ட் போட்டியை இந்திய மகளிர் அணி கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் சினே ராணா ஆட்டநாயகிக்கான விருது வென்றார். முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் கைப்பற்றிய சினே ராணா, 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.