
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து வென்ற இந்திய அணி, டி20 தொடரிலும் வெஸ்ட் இண்டீஸை 3-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது.
முதலிரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் 4 மாற்றங்கள் செய்யப்பட்டன. விராட் கோலி, ரிஷப் பண்ட், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார் ஆகிய நால்வருக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர் மற்றும் ஆவேஷ் கான் ஆகிய நால்வரும் சேர்க்கப்பட்டனர்.
ருதுராஜ் அணியில் சேர்க்கப்பட்டதையடுத்து, ருதுராஜ் - இஷான் கிஷன் ஆகிய 2 இளம் வீரர்களை ஓபனிங்கில் இறக்கிவிட்டார் கேப்டன் ரோஹித் சர்மா. ருதுராஜ் வெறும் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இஷான் கிஷன் 34 ரன்னிலும், ரோஹித் சர்மா 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, 13.5 ஓவரில் 93 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது.
அதன்பின்னர் சூர்யகுமார் யாதவும் வெங்கடேஷ் ஐயரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடினர். 15 ஓவரில் இந்திய அணி 98 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின்னர் சூர்யகுமாரும் வெங்கடேஷும் இணைந்து பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசினர். 28 பந்தில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்தார். 19 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்களை குவிக்க, கடைசி 5 ஓவரில் இந்திய அணிக்கு 86 ரன்கள் கிடைத்ததால் 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது இந்திய அணி.
இதையடுத்து 185 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கைல் மேயர்ஸ் (6) மற்றும் ஷேய் ஹோப் (8) ஆகிய இருவரையும் ஆரம்பத்திலேயே தீபக் சாஹர் வீழ்த்தினார். அதன்பின்னர் பூரனும் பவலும் இணைந்து அடித்து ஆட, அந்த அபாயகரமான ஜோடியை நிலைக்கவிடாமல் பவலை 25 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் ஹர்ஷல் படேல்.
அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸின் சீனியர் அதிரடி வீரர்களும் மேட்ச் வின்னர்களுமான பொல்லார்டு(5) மற்றும் ஹோல்டர் (2) ஆகிய இருவரையுமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் வெங்கடேஷ் ஐயர். அதன்பின்னர் அடித்து ஆடிய ரோஸ்டான் சேஸை 12 ரன்னில் வீழ்த்தினார் ஹர்ஷல் படேல்.
ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த நிகோலஸ் பூரன், இந்திய அணிக்கு அபாயமாக திகழ்ந்தார். ஆனால் அவரை 61 ரன்களுக்கு வீழ்த்தினார் ஷர்துல் தாகூர். நன்றாக விளையாடிய ரொமாரியோ ஷெஃபெரை 29 ரன்களுக்கு 19வது ஓவரில் ஹர்ஷல் படேல் வீழ்த்த, கடைசி ஓவரில் ஷர்துல் தாகூர் டிரேக்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ், 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் அடித்து, 17 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
அபாரமாக பந்துவீசிய ஹர்ஷல் படேல், 4 ஓவரில் வெறும் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், வெங்கடேஷ் ஐயர் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த வெற்றியையடுத்து, 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடரை வென்றது இந்திய அணி.