
சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி, அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளார். இலங்கைக்கு எதிராக நாளை மொஹாலியில் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டிதான், அவரது 100வது டெஸ்ட் போட்டி.
2011ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிவரும் விராட் கோலி, 99 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 27 சதங்கள் மற்றும் 28 அரைசதங்களுடன் 7962 ரன்களை குவித்துள்ளார். 2014ம் ஆண்டிலிருந்து இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திவந்த கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டன்சி செய்து 40 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி விலகியதையடுத்து, ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித்தின் கேப்டன்சியில், விராட் கோலி அவரது 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் இலங்கைக்கு எதிராக ஆடவுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 27 சதங்களை அடித்துள்ள விராட் கோலி, கடந்த 2 ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் திணறிவருகிறார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலேயே அவரிடமிருந்து பெரிய இன்னிங்ஸ் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோலி ஏமாற்றமளித்தார். எனவே இலங்கைக்கு எதிராக அவர் ஆடவுள்ள 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் அவரிடமிருந்து சதம் எதிர்பார்க்கப்படுகிறது.
மொஹாலியில் நடக்கும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆரம்பத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படும் ஐடியா இல்லை. பார்வையாளர் இல்லாமல் காலி ஸ்டேடியத்தில் தான் இந்த போட்டி நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் கோலியின் 100வது டெஸ்ட் என்பதால், 50 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்க பிசிசிஐ ஒப்புதல் அளித்தது. எனவே 50 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர்.
கோலியின் 100வது சர்வதேச டெஸ்ட் போட்டியை காண 50 சதவிகித பார்வையாளர்களை பிசிசிஐ அனுமதித்தது வரவேற்கத்தக்க முடிவு என்று இலங்கை கேப்டன் திமுத் கருணரத்னே கருத்து கூறியுள்ளார்.