ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.. இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா கருத்து

By karthikeyan VFirst Published Aug 20, 2022, 10:16 PM IST
Highlights

ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
 

ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆகஸ்ட் 28ம் தேதி துபாயில் மோதுகின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதுவதால், இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அந்தவகையில், வரும் 28ம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
 
ஆசிய கோப்பையில் 3 முறையாவது இந்தியா - பாகிஸ்தான் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இந்தியா களமிறங்குகிறது.

இதையும் படிங்க - ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் எந்த 2 அணிகள் மோதும்..? ஷேன் வாட்சன் ஆருடம்

பாகிஸ்தான் அணி பொதுவாக இந்தியாவிற்கெதிரான போட்டி என்றாலே, அழுத்தம் அதிகமாகி, அதனாலேயே நிறைய தவறுகளை செய்து தோல்வியை தழுவிவிடும். ஆனால் இதை மாற்றியமைத்துள்ளது பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. அதேபோல் தங்கள் திறமையின் மீது மட்டுமே நம்பிக்கை வைத்து இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளதாக கேப்டன் பாபர் அசாம் தெரிவித்திருந்தார்.
 
இந்திய அணியும், கடந்த டி20 உலக கோப்பையில் தோல்வியடைந்த அணி கிடையாது. புதிய கேப்டன் ரோஹித் சர்மா, புதிய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என முற்றிலும் புதிய அணியுடனும், அணுகுமுறையுடனும் களமிறங்குகிறது. எனவே ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி மிக சுவாரஸ்யமாக இருக்கும்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பையிலிருந்து விலகிய மேட்ச் வின்னர்..! பாகிஸ்தானுக்கு பாதகம்.. இந்தியாவிற்கு சாதகம்

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இந்தியா - பாகிஸ்தான் போட்டியை அனைவருமே பார்ப்பார்கள். இது உயர் அழுத்தம் வாய்ந்த போட்டி என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் இந்த போட்டியை மிகைப்படுத்தாமல், இயல்பாக எதிர்கொள்ளும் சூழலை அணியில் உருவாக்க வேண்டும். மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியை போலத்தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியும்.. இதில் சிறப்பாக எதுவும் இல்லை என்ற எண்ணத்தை வீரர்களிடம் உருவாக்குவதே எனது மற்றும் ராகுல் Bhai-யின் பணியாகும் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.
 

click me!