#INDvsENG ரோஹித், கோலி அதிரடி அரைசதம்; ஹர்திக், சூர்யகுமார் காட்டடி..! 20 ஓவரில் 224 ரன்களை குவித்த இந்தியா

By karthikeyan VFirst Published Mar 20, 2021, 8:54 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 224 ரன்களை குவித்து, 225 ரன்கள் என்ற கடின இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 தொடர் 2-2 என சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.

இந்த போட்டியில் இந்திய அணி ஒரேயொரு மாற்றத்துடன் களமிறங்கியது. கேஎல் ராகுலுக்கு பதிலாக கூடுதல் பவுலராக டி.நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டார். 

ராகுல் ஆடாததால் ரோஹித்துடன் கோலி தொடக்க வீரராக இறங்கினார். ஆரம்பத்திலிருந்தே ரோஹித் சர்மா அடித்து ஆட, கோலி அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிங்கிள் எடுத்து கொடுத்தார். அடித்து ஆடிய ரோஹித் சர்மா, மார்க் உட், ஆர்ச்சர் ஆகிய இருவரின் வேகத்தையும் அடித்து நொறுக்கினார்.

ரோஹித்தின் அதிரடியால் பவர்ப்ளேயில்(6 ஓவரில்) விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் அடித்தது இந்திய அணி. அடித்து ஆடி அரைசதம் அடித்த ரோஹித் சர்மா,  34 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் அடித்து ஸ்டோக்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களத்திற்கு வந்த சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியிலும் அபாரமாக ஆடினார். 17 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 32 ரன்களை விளாசி சூர்யகுமார் யாதவ் அடில் ரஷீத்தின் சுழலில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கோலியுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார்.

தொடக்க வீரராக இறங்கிய ஆரம்பத்தில் நிதானமாகவும், பின்னர் அடித்தும் ஆடி அரைசதம் அடிக்க, ஹர்திக் பாண்டியா, தனது இயல்பான அதிரடி பேட்டிங்கை ஆடினார். ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் அடிக்க, அரைசதம் அடித்த கேப்டன் கோலி, கடைசி வரை களத்தில் நின்று 52 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 80 ரன்களை குவிக்க, இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களை குவித்தது.

இங்கிலாந்து அணி 225 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிவருகிறது.
 

click me!