படுமட்டமாக பேட்டிங் ஆடிய இந்திய வீரர்கள்..! நியூசிலாந்துக்கு மிக எளிய இலக்கை நிர்ணயித்த இந்தியா

By karthikeyan VFirst Published Oct 31, 2021, 9:55 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் வெறும் 110 ரன்கள் மட்டுமே அடித்து, 111 ரன்கள் என்ற எளிய இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

டி20 உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான, கிட்டத்தட்ட நாக் அவுட் மாதிரியான போட்டி துபாயில்  இன்று நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் 2 மாற்றங்களும், நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றமும் செய்யப்பட்டன. 

இந்திய அணியில் காயம் காரணமாக சூர்யகுமார் ஆடவில்லை. அவருக்கு பதிலாக இஷான் கிஷன் எடுக்கப்பட்டார். புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் ஆடுகிறார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ஷர்துல் தாகூர், ஷமி, பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

நியூசிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிம் சௌதிக்கு பதிலாக ஆடம் மில்னே சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி:

மார்டின் கப்டில், டேரைல் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவான் கான்வே, க்ளென் ஃபிலிப்ஸ், ஜிம்மி நீஷம், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட், ஆடம் மில்னே.

இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டதால், ரோஹித் சர்மா தொடக்க வீரராக இறக்கப்படாமல் கேஎல் ராகுலுடன் இஷான் கிஷன் தொடக்க வீரராக இறக்கப்பட்டார். இஷான் கிஷன் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ராகுல் 18 ரன்னில் ஆட்டமிழக்க, இந்த போட்டியில் 3ம் வரிசையில் இறங்கிய ரோஹித் 14 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கோலி(9), ரிஷப் பண்ட்(12), ஹர்திக் பாண்டியா(23), ரவீந்திர ஜடேஜா(26) ஆகிய அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 20 ஓவரில் 110 ரன்கள் மட்டுமே அடித்தது இந்திய அணி.

111 ரன்கள் என்ற எளிய இலக்கை நியூசிலாந்து அணி விரட்டிவருகிறது.
 

click me!