நமீபியாவை 98 ரன்னில் பொட்டளம் கட்டி ஆஃப்கானிஸ்தான் அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Oct 31, 2021, 8:01 PM IST
Highlights

நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 62  ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, 4 புள்ளிகளுடன் க்ரூப் 2ல் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
 

டி20 உலக கோப்பை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், க்ரூப் 2-ல் இடம்பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையேயான போட்டி அபுதாபியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 160 ரன்களை குவித்தது.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஹஸ்ரதுல்லா சேஸாய் மற்று முகமது ஷேஷாத் ஆகிய இருவரும் இணைந்து ஆஃப்கானிஸ்தானுக்கு 6.4 ஓவரில் 53 ரன்களை சேர்த்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.  சேஸாய் 33 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ரஹ்மானுல்லா 4 ரன்னுக்கு நடையை கட்டினார். சிறப்பாக ஆடிய முகமது ஷேஷாத் 45 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார்.

டி20 கிரிக்கெட்டில் ஆஃப்கானிஸ்தானுக்காக தனது கடைசி இன்னிங்ஸை ஆடிய அஸ்கர் ஆஃப்கான் 23 பந்தில் 31 ரன்கள் அடித்தார். கேப்டன் முகமது நபி பொறுப்புடனும் அதேவேளையில், அடித்தும் ஆடி 17 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 32 ரன்களை விளாச, 20 ஓவரில் 160 ரன்களை குவித்த ஆஃப்கானிஸ்தான் அணி, 161 ரன்களை நமீபியாவுக்கு நிர்ணயித்தது.

161 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நமீபியா அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துகொண்டே இருந்தது. தட்டுத்தடுமாறி 20 ஓவர்கள் முழுவதும் அந்த அணி பேட்டிங் ஆடினாலும், ஒரு வீரர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் 20 ஓவரில் நமீபியா அணி வெறும் 98 ரன்கள் மட்டுமே அடித்தது. இதையடுத்து ஆஃப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

நமீபியா அணியில் அதிகபட்சமாக டேவிட் வீஸ் 26 ரன்கள் அடித்தார். ஆஃப்கானிஸ்தான் அணி சார்பில் நவீன் உல் ஹக் மற்றும் ஹமீத் ஹசன் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்த வெற்றியின் மூலம் 4 புள்ளிகளை பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி க்ரூப் 2-க்கான புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது.
 

click me!