#SLvsIND மழைக்கு பின் மளமளவென சரிந்த இந்திய பேட்டிங் ஆர்டர்..! பவுலிங்கில் பட்டைய கிளப்புனா தான் ஜெயிக்கலாம்

By karthikeyan VFirst Published Jul 23, 2021, 8:31 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 225 ரன்களுக்கே சுருண்டது.
 

இலங்கைக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை வென்றுவிட்ட இந்திய அணி, இன்று நடந்துவரும் 3வது போட்டியில், முதலிரண்டு போட்டிகளில் ஆட வாய்ப்பு கிடைக்காத வீரர்களுக்கு வாய்ப்பளித்தது.

அந்தவகையில், சஞ்சு சாம்சன், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கௌதம், சேத்தன் சக்காரியா ஆகிய 4 வீரர்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகினர். கொழும்பில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஷிகர் தவான் 13 ரன்களுக்கு 3வது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். இதையடுத்து பிரித்வி ஷாவுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடினார். பிரித்வி ஷாவும் சஞ்சு சாம்சனும் இணைந்து சிறப்பாக ஆடி 2வது விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்தனர். 49 ரன்களில் ஆட்டமிழந்து ஒரு ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார் பிரித்வி ஷா. அவரைத்தொடர்ந்து சஞ்சு சாம்சனும் அரைசதத்தை தவறவிட்டு 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் சூர்யகுமார் யாதவும் மனீஷ் பாண்டேவும் களத்தில் இருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. 23 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் அடித்திருந்தது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. அதனால் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டு, மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடர்ந்தது.

மழைக்கு பின் இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. மனீஷ் பாண்டே தான் வெற்றிகரமாக இந்த விக்கெட் வீழ்ச்சியை தொடங்கிவைத்தார். 19 பந்தில் 11 ரன் அடித்து மனீஷ் பாண்டே ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா 19 ரன்னில் ஆட்டமிழந்து மற்றுமொரு ஏமாற்றினார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ் 40 ரன்னில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் நிதிஷ் ராணா(7), கிருஷ்ணப்பா கௌதம்(2), ராகுல் சாஹர்(13), நவ்தீப் சைனி(15) ஆகியோர் அடுத்தடுத்து மளமளவென ஆட்டமிழக்க, 225 ரன்களுக்கே ஆல் அவுட்டானது இந்திய அணி.

47 ஓவரில் 226 ரன்கள் என்பது எளிதான இலக்கே என்பதால், இந்திய அணி நன்றாக பந்துவீசினால் மட்டுமே இந்திய அணி ஜெயிக்க முடியும்.
 

click me!