தயவுசெய்து சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடாதீங்க..! செம கடுப்பான அக்தர்

By karthikeyan VFirst Published Jul 23, 2021, 5:52 PM IST
Highlights

வெவ்வேறு காலக்கட்டங்களில் ஆடிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரையும் ஒப்பிடக்கூடாது என்று ஷோயப் அக்தர் மிகக்காட்டமாக தெரிவித்துள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக வலம்வரும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள், அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை கோலி முறியடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான்களான கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் வரிசையில் மிகப்பெரிய ஜாம்பவனாக திகழ்கிறார் கோலி. அதன் விளைவாக சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படுகிறார்.

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் விராட் கோலி. வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. அது சரியாக இருக்காது. ஆனால் சச்சின் டெண்டுல்கருடன் கோலியை ஒப்பிடுவதே பரவாயில்லை எனுமளவிற்கு, மற்றொரு விவாதமும் கேள்வியும் சில நேரங்களில் முன்வைக்கபடுகிறது.

இந்த கேள்வியை எழுப்புவதே தவறு. ஏனென்றால் வாசிம் அக்ரம், மெக்ராத், முரளிதரன், ஷேன் வார்னே, வக்கார் யூனிஸ், சமிந்தா வாஸ், அக்தர், பிரெட் லீ போன்ற மிகச்சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர் சச்சின் டெண்டுல்கர். இந்த காலக்கட்டத்தில் அந்தளவிற்கான மிகச்சிறந்த பவுலர்கள் எல்லாம் இல்லை என்பதால்,  கோலி சிறந்த வீரராக இருந்தாலும் அவரை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடக்கூடாது.

அந்தவகையில், இதே கருத்தைத்தான் அக்தரும் தெரிவித்துள்ளார். சச்சின் - கோலி ஒப்பீடு தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும் நிலையில், அதுகுறித்து பேசியுள்ள ஷோயப் அக்தர், சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். சச்சின் ஆடிய காலக்கட்டத்தில் கோலி ஆடவில்லை. அவர் ஆடிய காலக்கட்டம் தான் ஒருநாள் கிரிக்கெட்டில், 10 ஓவர்களுக்கு பிறகு பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆன ஒரே காலக்கட்டம். வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸின் ரிவர்ஸ் ஸ்விங், ஷேன் வார்னின் ஸ்பின் ஆகிய சவால்களை எதிர்கொண்டு ஆடியவர் சச்சின் டெண்டுல்கர். 

ஒவ்வொரு அணியிலும் ஸ்பெஷலிஸ்ட்டுகள் இருந்த காலக்கட்டம் அது. லான்ஸ் க்ளூஸ்னர், ஜாக் காலிஸ், ஷான் போலாக், ஆலன் டொனால்ட், நிடினி ஆகியோர் இருந்தனர். ஒவ்வொரு அணியிலும் அதேபோல 5 தரமான ஃபாஸ்ட் பவுலர்கள் இருந்தனர். ஆனால் இப்போது? கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகிய இருவர் தான் உள்ளனர். 

இப்போது எத்தனை ஃபாஸ்ட் பவுலர்கள் 150 கிமீ வேகத்தில் வீசுகிறார்கள்? என்ற கேள்வியை எழுப்பி சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது என்று அக்தர் தெரிவித்துள்ளார்.
 

click me!