இங்கிலாந்து அணிக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிகமான துருவ் ஜூரெல் 90 ரன்கள் எடுத்துக் கொடுக்க இந்திய அணி 307 ரன்கள் குவித்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து 353 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்கள் எடுத்துக் கொடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது.
இதில், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. ரோகித் சர்மா 2, சுப்மன் கில் 38, ரஜத் படிதார் 17, ரவீந்திர ஜடேஜா 12, சர்ஃபராஸ் கான் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 என்று அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே 117 பந்துகள் பிடித்து 8 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 177 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரேல் இருவரும் நிதானமாக நின்று விளையாடி விக்கெட் சரிவிலிருந்து மீட்டு ரன்களும் குவித்தனர்.
இரண்டாம் நாளில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் குல்தீப் யாதவ் மற்றும் துருவ் ஜூரெல் இருவரும் 3ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இதில் குல்தீப் யாதவ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆகாஷ் தீப் களமிறங்கினார். ஆனால், அவருக்கு அதிக ஸ்டிரைக் கொடுக்காமல் விளையாடிய துருவ் ஜூரெல் தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
அதோடு சல்யூட் அடித்து தனது நன்றியை வெளிக்காட்டினார். அவருக்கு ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு தொடர்ந்து விளையாடிய அவர் ஸ்பின் பவுலிங்கை நன்றாக பயன்படுத்தி இந்திய அணியை 300 ரன்கள் எட்ட உதவினார். இதற்கிடையில் ஆகாஷ் தீப் 9 ரன்களில் ஆட்டமிழக்க, ஜூரெல் 90 ரன்கள் எடுத்திருந்த போது டாம் ஹார்ட்லி பந்தில் கிளீன் போல்டானார். இறுதியாக இந்திய அணி 307 ரன்கள் மட்டுமே எடுத்து 46 ரன்கள் பின்தங்கியது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் இங்கிலாந்து அணியில் சோயிப் பஷீர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார்.