7வது ஓவரிலேயே இலக்கை அடித்து இந்தியா அபார வெற்றி..! ஆஃப்கானிஸ்தான் நெட் ரன்ரேட்டை முந்தியது இந்தியா

By karthikeyan VFirst Published Nov 5, 2021, 10:10 PM IST
Highlights

ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில், அந்த அணி நிர்ணயித்த 86 ரன்கள் என்ற இலக்கை 6.3 ஓவரிலேயே அடித்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. அரையிறுதிக்கான வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொண்டு ஆடியது இந்திய அணி.

துபாயில் நடந்த இந்த போட்டியில், இந்த டி20 உலக கோப்பை தொடரிலேயே முதல் முறையாக டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு கூடுதல் ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டார். இந்த போட்டியில் இந்திய அணி, அஷ்வின், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி ஆகிய 3ஸ்பின்னர்கள் மற்றும் ஷமி, பும்ரா ஆகிய 2 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடியது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

ஸ்காட்லாந்து அணி:

ஜார்ஜ் முன்சி, கைல் கோயட்ஸர் (கேப்டன்), மேத்யூ க்ராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், காலம் மெக்லியாட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சாஃபியான் ஷாரிஃப், அலாஸ்டைர் இவான்ஸ், பிராட்லி வீல்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். முதல் விக்கெட்டாக ஸ்காட்லாந்து கேப்டன் கோயட்ஸரை வீழ்த்தி விக்கெட் வேட்டையை தொடங்கிவைத்தார் பும்ரா.

அதன்பின்னர் அதிரடியாக ஆடிய முன்சியை(19 பந்தில் 24 ரன்கள்) முகமது ஷமி வீழ்த்தினார். ஸ்காட்லாந்து வீரர்களை எளிதாக ரன் அடிக்கவிடாமல் செம டைட்டாக வீசினர் இந்திய பவுலர்கள். இந்த போட்டியில் 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி ஆடிய நிலையில், மிடில் ஓவர்களில் ஜடேஜா, அஷ்வின் மற்றும் வருண் ஆகிய மூவருமே நன்றாக வீசினர்.

குறிப்பாக அபாரமாக பந்துவீசிய ஜடேஜா, 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். காலம் மெக்லியாடை 17வது ஓவரின் முதல் பந்தில் வீழ்த்திய ஷமி, 3வது பந்தில் அலாஸ்டைர் இவான்ஸை வீழ்த்தினார். 2வது பந்தில் ஷாஃபியான் ஷாரிஃப் ரன் அவுட்டானார். அதற்கடுத்த ஓவரிலேயே கடைசி விக்கெட்டை பும்ரா வீழ்த்த, வெறும் 85 ரன்களுக்கு சுருண்டது ஸ்காட்லாந்து அணி.

86 ரன்கள் என்ற இந்த மிக எளிய இலக்கை இந்திய அணி 7.1 ஓவரில் அடித்தால், ஆஃப்கானிஸ்தானின் நெட் ரன்ரேட்டை விட அதிகம் பெறலாம். அப்படி வெற்றி பெறும்பட்சத்தில் கடைசி போட்டியில் நமீபியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே போதுமானது. ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தினால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புள்ளது.

அதனால் 7.1 ஓவருக்குள்ளாக இலக்கை விரட்டும் முனைப்புடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் கேஎல் ராகுலும் முதல் பந்திலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தனர். ஸ்காட்லாந்து பவுலர்கள் வீசிய எல்லா பந்தையும் பவுண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசினர். இந்த டி20 உலக கோப்பையில் பவர்ப்ளேயில் அதிகபட்ச ஸ்கோரை 5வது ஓவரிலேயே அடித்துவிட்டனர்.

5 ஓவரில் இந்திய அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்து கொடுத்தனர். 16 பந்தில் 30 ரன்கள் அடித்து ரோஹித் சர்மா ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடி 18 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்த ராகுல், அடுத்த பந்திலேயே 50 ரன்களில் ஆட்டமிழந்தார். 8வது ஓவரின் முதல் பந்தில் இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்த நிலையில், 7வது ஓவரின் 3வது பந்திலேயே சிக்ஸர் விளாசி போட்டியை முடித்தார் சூர்யகுமார்.

6.3 ஓவரில் இலக்கை அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 4 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த அபார வெற்றியின் மூலம் +1.62 என்ற நெட் ரன்ரேட்டுடன் ஆஃப்கானிஸ்தானை பின்னுக்குத்தள்ளி புள்ளி பட்டியலில் 3ம் இடத்திற்கு முன்னேறியது இந்திய அணி. ஆஃப்கானிஸ்தான் அணி நியூசிலாந்தை வீழ்த்தினால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
 

click me!