ஸ்காட்லாந்தை 85 ரன்னுக்கு பொட்டளம் கட்டிய இந்திய பவுலர்கள்..! 7.1 ஓவரில் ஜெயிச்சு ஆகணும் இந்தியா

By karthikeyan VFirst Published Nov 5, 2021, 9:24 PM IST
Highlights

டி20 உலக கோப்பை தொடரில் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் ஸ்காட்லாந்தை வெறும் 85 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி, 86 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது.
 

டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் 1-ல் இங்கிலாந்து அணியும், க்ரூப் 2-ல் பாகிஸ்தான் அணியும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.

க்ரூப் 1-ல் 2வது அணியாக அரையிறுதிக்கு முன்னேற ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. க்ரூப் 2-ல் அரையிறுதிக்கு முன்னேற, ஆஃப்கானிஸ்தான், நியூசிலாந்து, இந்தியா ஆகிய 3 அணிகளுக்கு இடையேயும் கடும் போட்டி நிலவுகிறது.

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க பெரிய வெற்றியை பெறவேண்டிய கட்டாயத்தில் ஸ்காட்லாந்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. துபாயில் நடக்கும் இந்த போட்டியில், இந்த டி20 உலக கோப்பை தொடரிலேயே முதல் முறையாக டாஸ் வென்றார் விராட் கோலி. டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த தொடரில் முதல் முறையாக இந்திய அணி இலக்கை விரட்டவுள்ளது. ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் ஆடவுள்ளது. 2வது இன்னிங்ஸில் பனிப்பொழிவு காரணமாக பந்துவீசுவது கடினம். அதனால் 2வது இன்னிங்ஸ் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அதனால் டாஸ் வென்ற கோலி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு கூடுதல் ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி, அஷ்வின், ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி ஆகிய 3ஸ்பின்னர்கள் மற்றும் ஷமி, பும்ரா ஆகிய 2 ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடுகிறது.

இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி.

ஸ்காட்லாந்து அணி:

ஜார்ஜ் முன்சி, கைல் கோயட்ஸர் (கேப்டன்), மேத்யூ க்ராஸ் (விக்கெட் கீப்பர்), ரிச்சி பெரிங்டன், காலம் மெக்லியாட், மைக்கேல் லீஸ்க், கிறிஸ் க்ரீவ்ஸ், மார்க் வாட், சாஃபியான் ஷாரிஃப், அலாஸ்டைர் இவான்ஸ், பிராட்லி வீல்.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். முதல் விக்கெட்டாக ஸ்காட்லாந்து கேப்டன் கோயட்ஸரை வீழ்த்தி விக்கெட் வேட்டையை தொடங்கிவைத்தார் பும்ரா.

அதன்பின்னர் அதிரடியாக ஆடிய முன்சியை(19 பந்தில் 24 ரன்கள்) முகமது ஷமி வீழ்த்தினார். ஸ்காட்லாந்து வீரர்களை எளிதாக ரன் அடிக்கவிடாமல் செம டைட்டாக வீசினர் இந்திய பவுலர்கள். இந்த போட்டியில் 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி ஆடிய நிலையில், மிடில் ஓவர்களில் ஜடேஜா, அஷ்வின் மற்றும் வருண் ஆகிய மூவருமே நன்றாக வீசினர்.

குறிப்பாக அபாரமாக பந்துவீசிய ஜடேஜா, 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டை வீழ்த்தினார். அஷ்வின் ஒரு விக்கெட் வீழ்த்தினார். காலம் மெக்லியாடை 17வது ஓவரின் முதல் பந்தில் வீழ்த்திய ஷமி, 3வது பந்தில் அலாஸ்டைர் இவான்ஸை வீழ்த்தினார். 2வது பந்தில் ஷாஃபியான் ஷாரிஃப் ரன் அவுட்டானார். அதற்கடுத்த ஓவரிலேயே கடைசி விக்கெட்டை பும்ரா வீழ்த்த, வெறும் 85 ரன்களுக்கு சுருண்டது ஸ்காட்லாந்து அணி.

86 ரன்கள் என்ற இந்த மிக எளிய இலக்கை இந்திய அணி 7.1 ஓவரில் அடித்தால், ஆஃப்கானிஸ்தானின் நெட் ரன்ரேட்டை விட அதிகம் பெறலாம். அப்படி வெற்றி பெறும்பட்சத்தில் கடைசி போட்டியில் நமீபியாவுக்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே போதுமானது. ஆஃப்கானிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தினால், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
 

click me!