சென்னையின் செல்லப்பிள்ளை, ஆன் & ஆஃப் ஃபீல்டு எண்டர்டெய்னர் பிராவோ..!

By karthikeyan VFirst Published Nov 5, 2021, 8:54 PM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸின் ஆல்ரவுண்டரும், பக்கா எண்டர்டெய்னருமான ட்வைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பொதுவாகவே, செம ஜாலியானவர்கள். வெற்றி, தோல்விகளை கடந்து களத்தில் கிரிக்கெட்டை மகிழ்ந்து ஆடுவார்கள். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஆட அனைத்து அணிகளுமே விரும்பும். அந்தளவிற்கு ஜாலியாக ஆடக்கூடியவர்கள். வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அனைவருமே செம எண்டர்டெய்னர்கள் தான் என்றாலும், ட்வைன் பிராவோ அவர்களில் முதன்மையானவர்.

2004ம் ஆண்டிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவந்த ட்வைன் பிராவோ, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஏற்கனவே ஓய்வுபெற்றுவிட்டார். டி20 அணியில் மட்டும் இருந்துவந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக மட்டுமல்லாது, ஐபிஎல், கரீபியன் பிரீமியர் லீக், கனடா பிரீமியர் லீக் உட்பட உலகின் அனைத்து முக்கியமான டி20 லீக் தொடர்களிலும் ஆடிவருகிறார் பிராவோ.

அதனால் உலகின் அனைத்துவிதமான கண்டிஷன்களை பற்றியும் நன்கறிந்த பிராவோ, உலகம் முழுதும் டி20 கிரிக்கெட்டில் அசத்திவருகிறார். நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், இந்த டி20 உலக கோப்பை தொடரில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மீண்டும் கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. பொல்லார்டு தலைமையில் கெய்ல், பிராவோ, எவின் லூயிஸ், ஆண்ட்ரே ரசல் ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஹெட்மயர், பூரன் ஆகிய இளம் வீரர்கள் என அனுபவமும் இளமையும் கலந்த அணியுடன் ஆடியது.

ஆனால் டி20 உலக கோப்பையில் தொடரில் படுமோசமாக ஆடி தொடரை விட்டு வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ் அணி. இலங்கைக்கு எதிரான நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, டி20 உலக கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், இந்த தொடருடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிராவோ. 

கடைசி உலக கோப்பை தொடர் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடனும் பெரிய கனவுகளுடனும் இந்த தொடரை ஆடிய பிராவோவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2006ம் ஆண்டிலிருந்து டி20 கிரிக்கெட்டில் ஆடிவந்த பிராவோ, 89 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி 1243 ரன்களை அடித்ததுடன், 77 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றிருந்தாலும், டி20 லீக் தொடர்களில் பிராவோ தொடர்ந்து ஆடுவார். ஐபிஎல்லில் 2011ம் ஆண்டிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிவரும் பிராவோ, சென்னையின் செல்லப்பிள்ளைகளில் ஒருவராகவும், தல தோனியின் தளபதியாகவும் திகழ்கிறார். 

ராஞ்சியில் பிறந்த தோனிக்கு சென்னை எப்படி இரண்டாவது வீடோ, பிராவோவுக்கும் அப்படித்தான். வெஸ்ட் இண்டீஸ் பிராவோவுக்கு சொந்த நாடாக இருந்தாலும், சென்னை தான் அவரது 2வது வீடு. இதை அவரே பல முறை தெரிவித்திருக்கிறார். சென்னையுடனும் தமிழ் கிரிக்கெட் ரசிகர்களுடனும் மிகுந்த நெருக்கம் கொண்டவர்.

களத்தில் விக்கெட் வீழ்த்திய பின்னர், பிராவோவின் நடன கொண்டாட்டம் மிகப்பிரபலம். களத்தில் மட்டுமல்லாது களத்திற்கு வெளியேயும் நடனம் ஆடுவது பிராவோவுக்கு மிகவும் பிடித்தது. தோனிக்காக பிராவோ பாடியிருந்த பாடல் செம வைரலானது. ஐபிஎல் ப்ரமோஷனுக்காக எடுக்கப்படும் விளம்பர வீடியோக்களிலும் வேஷ்டியை கட்டிக்கொண்டு நடனமாடி அதகளப்படுத்துவார் பிராவோ.

டி20 கிரிக்கெட்டில் நீண்டநெடிய அனுபவம் கொண்ட பிராவோ, டி20 கிரிக்கெட்டில்(சர்வதேச டி20 மற்றும் டி20 லீக் தொடர்கள்) அதிக டைட்டிலை(16) வென்ற வீரர் சாதனைக்கு சொந்தக்காரர் பிராவோ. பிராவோ சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருந்தாலும், டி20 லீக் தொடர்களில் ஆடி தொடர்ந்து ரசிகர்களை எண்டர்டெய்ன் செய்வார்.
 

click me!