
India And England Players Wear Black Armbands After Dilip Doshi's Death: லீட்ஸில் நடந்து வரும் இந்தியா, இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்பு இந்திய அணி 2வது இன்னிங்சில் இந்திய அணி 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
கருப்பு பட்டை அணிந்து விளையாடும் வீரர்கள்
இதனால் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வரும் இங்கிலாந்து அணி 5வது மற்றும் கடைசி நாளான உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் அதிரடி அரைசதம் விளாசினார். இன்று கடைசி நாளில் விளையாடும் இந்தியா, இங்கிலாந்து அணி வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்கள்.
முன்னாள் வீரர் திலீப் தோஷி மரணம்
இந்திய அணியின் முன்னாள் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான திலீப் தோஷி உடல்நலக்குறைவால் லண்டனில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. இதய்க் கோளாறு காரணமாக அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. திலீப் தோஷி மறைவுக்கு மரியாதை செய்யும் விதமாக இன்றைய நாள் இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்னதாக இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடினார்கள்.
32 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்
1970களின் புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளர்களைப் பின்பற்றி 32 வயதில் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய திலீப் தோஷி, தனது இடதுகை சுழற்பந்து வீச்சின் மூலம், 33 டெஸ்ட் போட்டிகளில் 114 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இதில் ஆறு முறை ஐந்து விக்கெட்டுகளும் அடங்கும்.
ஒருநாள் போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்திய தோஷி, 15 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை 3.96 என்ற சிக்கன விகிதத்தில் வீழ்த்தியுள்ளார்.
கவுண்டி கிரிக்கெட்டில் ஆடியுள்ளார்
சௌராஷ்டிரா, வங்காளம், வார்விக்ஷயர் மற்றும் நாட்டிங்ஹாம்ஷயர் அணிகளுக்காக முதல் தர கிரிக்கெட்டில் விளையாடிய தோஷி, 238 போட்டிகளில் 898 விக்கெட்டுகளை 26.58 என்ற சராசரியில் கைப்பற்றியுள்ளார். நாட்டிங்ஹாம்ஷயரில், மேற்கிந்திய தீவுகள் அணியின் கார்ஃபீல்ட் சோபர்ஸ், தோஷியை பெரிதும் ஈர்த்தார். 1980களில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோஷி, தனது சுயசரிதையான ஸ்பின் பஞ்சில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை விவரித்துள்ளார்.
பிசிசிஐ இரங்கல்
1981 ஆம் ஆண்டு மெல்போர்ன் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற உதவியது தோஷியின் சிறந்த சாதனைகளில் ஒன்றாகும். இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் அதிகம் விளையாடிய திலிப் தோஷி, ஓய்வு பெற்ற பிறகு லண்டனிலேயே வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தோஷி மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) இரங்கல் தெரிவித்துள்ளது.
சச்சின் டெண்டுல்கர் இரங்கல்
இதேபோல் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ''1990 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நான் திலீப் பாயை முதன்முதலில் சந்தித்தேன். அந்த சுற்றுப்பயணத்தில் அவர் வலை பயிற்சியில் எனக்கு பந்து வீசினார். அவர் என்னை மிகவும் நேசித்தார், நான் அவரது உணர்வுகளுக்கு ஈடாக பதிலளித்தேன். திலீப் பாயை போன்ற ஒரு அன்பான ஆன்மாவை நான் மிகவும் இழக்கிறேன். நாங்கள் எப்போதும் நடத்திய அந்த கிரிக்கெட் உரையாடல்களை நான் இழப்பேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்'' என்று தெரிவித்துள்ளார்.