
இந்தியா - ஜிம்பாப்வே இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. தீபக் சாஹர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.
இந்திய அணி:
ஷிகர் தவான், ஷுப்மன் கில், இஷான் கிஷன், கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.
முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் போட்டியை போலவே இந்த போட்டியிலும் தொடக்கம் முதலே மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 31 ரன்களுக்கே ஜிம்பாப்வே அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், சீன் வில்லியம்ஸும் ரியான் பர்லும் சிறப்பாக பேட்டிங் ஆடினர்.
சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும், ரியான் 39 ரன்களும் அடித்தனர். மற்றவர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, 38.1ஓவரில் வெறும் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே அணி. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரசித் கிருஷ்ணா, சிராஜ், அக்ஸர் படேல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து 162 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும் ஷிகர் தவானும் களமிறங்கினார்கள். காயத்திலிருந்து மீண்டு நீண்ட இடைவெளிக்கு பின் இந்தியாவிற்காக பேட்டிங் ஆடிய ராகுல் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழந்தார். தவான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் தலா 33 ரன்கள் அடித்தார்.
இஷான் கிஷன் வெறும் 6 ரன்னில் ஆட்டமிழக்க, தீபக் ஹூடாவும் சஞ்சு சாம்சனும் இணைந்து வெற்றியை நெருங்கினர். ஆனால் 26 ரன்னில் தீபக் ஹூடா ஆட்டமிழக்க, 44 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை முடித்துக்கொடுத்தார் சஞ்சு சாம்சன்.
26வது ஓவரிலேயே இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என தொடரை வென்றது.