
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், அந்த அணியின் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான நிகோலஸ் பூரன் மட்டுமே அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 43 பந்தில் 61 ரன்களை குவித்தார் பூரன். அவரைத்தவிர மற்ற யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. ஆனால் கைல் மேயர்ஸ்(31), பொல்லார்டு(24) ஆகியோரின் சிறு சிறு பங்களிப்பால் 20 ஓவரில்157 ரன்கள் அடித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்திய அணியில் இந்த போட்டியில் அறிமுகமான ரிஸ்ட் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய், அபாரமாக பந்துவீசி ஒரே ஓவரில் ரோஸ்டான் சேஸ் மற்றும் ரோவ்மன் பவல் ஆகிய இருவரையும் வீழ்த்தினார். அறிமுக போட்டியில் அபாரமாக பந்துவீசிய ரவி பிஷ்னோய், 4 ஓவரில் 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ஹர்ஷல் படேலும் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து 158 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்த ரோஹித் சர்மா 19 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் விளாசி ரோஹித் ஆட்டமிழந்தார். ரோஹித் அதிரடியாக விளையாடியதால் நிதானம் காத்த இஷான் கிஷன் 42 பந்தில் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். கோலி 13 பந்தில் 17 ரன் மட்டுமே அடித்து மீண்டும் ஏமாற்றமளித்தார். ரிஷப் பண்ட்டும் 8 ரன்னில் நடையை கட்டினார்.
அதன்பின்னர் சூர்யகுமார் யாதவும் வெங்கடேஷ் ஐயரும் இணைந்து அதிரடியாக ஆடி 4.2 ஓவரில் 48 ரன்களை குவித்து 19வது ஓவரில் இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 18 பந்தில் 34 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 13 பந்தில் 24 ரன்களும் அடித்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது.
அறிமுக டி20 போட்டியில் அபாரமாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.