WI vs IND: முதல் ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி

Published : Jul 23, 2022, 08:52 AM IST
WI vs IND: முதல் ஒருநாள் போட்டியில் கடைசி பந்தில் இந்தியா த்ரில் வெற்றி

சுருக்கம்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.   

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி டிரினிடாட்டில் நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா ஆகியோர் ஆடாததால் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி தான் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டு ஆடியது.

இந்திய அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.

இதையும் படிங்க - விராட் கோலியின் ஒரு இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு இத்தனை கோடியா? அடேங்கப்பா.. பிசிசிஐ ஒப்பந்த ஊதியத்தை விட அதிகம்

வெஸ்ட் இண்டீஸ் அணி:

ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), பிரண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல், அகீல் ஹுசைன், ரொமாரியோ ஷெஃபெர்டு, அல்ஸாரி ஜோசஃப், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் இணைந்து அருமையான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஷுப்மன் கில் அதிரடியாக ஆட, தவான் நிதானம் காட்டினார்.  அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த கில் 53 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்களை விளாசி ரன் அவுட்டாகி வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு தவானும் கில்லும் இணைந்து 17.4 ஓவரில் 119 ரன்களை குவித்தனர்.

அதன்பின்னர் தவானுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடிய தவான், சதத்தை நெருங்கிய நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் 18வது சதத்தை விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 97 ரன்னில் ஆட்டமிழந்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார்.

தவானுடன் இணைந்து சிறப்பாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயரும் அரைசதம் அடித்தார். ஆனால் அவர் 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் (13), சஞ்சு சாம்சன் (12), தீபக் ஹூடா (27) ஆகியோரும் ஏமாற்றமளிக்க, பெரிய ஸ்கோரை நோக்கி சென்ற இந்திய அணி, 50 ஓவரில் 308 ரன்கள் மட்டுமே அடித்தது.

ஆனாலும் 308 ரன்கள் என்பது நல்ல ஸ்கோர் தான். 309 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 68 பந்தில் 75 ரன்களை குவித்தார் மேயர்ஸ். 3ம் வரிசையில் இறங்கிய ப்ரூக்ஸ் மற்றும் 4ம் வரிசையில் இறங்கிய பிரண்டன் கிங் ஆகிய இருவருமே பொறுப்புடன் சிறப்பாக பேட்டிங் ஆடினர். ப்ரூக்ஸ் 46 ரன்களும், அரைசதம் அடித்த பிரண்டன் கிங் 54 ரன்களும் அடித்தனர்.

இதையும் படிங்க - ஆசிய கோப்பை ப்ரமோவை வெளியிட்டது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்..!

கேப்டன் பூரன் 25 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ரோவ்மன் பவல் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் அகீல் ஹுசைனும் ரொமாரியோ ஷெஃபெர்டும் இணைந்து அதிரடியாக ஆடி வெற்றியை நோக்கி வெஸ்ட் இண்டீஸை அழைத்துச்சென்றனர். ஆனால் இந்திய பவுலர்கள் வெற்றிக்கு அனுமதிக்கவில்லை. கடைசி 2 ஓவரில் வெஸ்ட் இண்டீஸின் வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. 49வது ஓவரை வீசிய பிரசித் கிருஷ்ணா, அந்த ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுக்க, கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி ஓவரை வீசிய முகமது சிராஜ் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுண்டரி அடித்தால் போட்டி டை ஆகியிருக்கும். ஆனால் பவுண்டரி கொடுக்காமல் ஒரு ரன் மட்டுமே கொடுத்தார் சிராஜ். இதையடுத்து 3 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது. அபாரமாக பேட்டிங் ஆடி 97 ரன்களை குவித்த ஷிகர் தவான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?