இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 91 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-1 என இந்திய அணி டி20 தொடரை வென்றது.
இந்தியா - இலங்கை இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற தொடர் 1-1 என சமனில் இருந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இலங்கை அணி:
பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தனஞ்செயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனாகா (கேப்டன்), வனிந்து ஹசரங்கா, சாமிகா கருணரத்னே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, தில்ஷான் மதுஷங்கா.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின்னர் ஷுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி அதிரடியாக பேட்டிங் ஆடி 16 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். நன்றாக அடித்து ஆடிய திரிபாதி முதல் அரைசதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் வழக்கம்போலவே மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டு இலங்கையை தெறிக்கவிட்டார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் சதம் விளாசினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 3வது சதத்தை விளாசி சாதனை படைத்தார். 51 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 112 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். அக்ஸர் படேல் 9 பந்தில் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 228 ரன்களை குவித்தது இந்திய அணி.
229 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பதும் நிசாங்காவை 15 ரன்னில் அர்ஷ்தீப் வீழ்த்தினார். மற்றொரு தொடக்க வீரரான குசால் மெண்டிஸ் 23 ரன்களுக்கு அக்ஸர் பந்தில் ஆட்டமிழந்தார். அவிஷ்கா ஃபெர்னாண்டோவை ஒரு ரன்னுக்கு ஹர்திக் வீழ்த்த, அதன்பின்னர் தனஞ்செயா டி சில்வா (22), சாரித் அசலங்கா(19) ஆகிய இருவரையும் யுஸ்வேந்திர சாஹல் வீழ்த்தினார்.
இலங்கை கேப்டன் தசுன் ஷனாகாவை 23 ரன்களுக்கு அர்ஷ்தீப் சிங் வீழ்த்தினார். இலங்கை அணியின் ஃபினிஷரான ஷனாகாவை நிலைக்கவிடாமல் வீழ்த்தி அனுப்பினார் அர்ஷ்தீப். கடந்த போட்டியில் ஷனாகாவின் அதிரடி ஃபினிஷிங் தான் அந்த அணி 206 ரன்களை எட்ட காரணம். அந்தவகையில் அவரது விக்கெட் மிக முக்கியமானது. கடந்த போட்டியில் 2 ஓவரில் 5 நோ பால்கள் வீசிய அர்ஷ்தீப் சிங், இந்த போட்டியில் அபாரமாக பந்துவீசி அதிகபட்சமாக 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
இந்திய அணியின் அபாரமான பவுலிங்கை தாக்குப்பிடிக்க முடியாமல் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இலங்கை அணி. 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 2-1 என டி20 தொடரை வென்றது.