#SLvsIND தவான், இஷான் கிஷன் அதிரடி அரைசதம்..! இலங்கையை அசால்ட்டாக ஊதித்தள்ளிய இந்தியா அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jul 18, 2021, 10:48 PM IST
Highlights

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

இந்தியா - இலங்கை இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் இன்று நடந்தது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. 

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் அறிமுகமாகியுள்ளனர். 2019 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இணைந்து ஆடிராத குல்தீப் யாதவ் - யுஸ்வேந்திர சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி இந்த போட்டியில் மீண்டும் இணைந்து ஆடினர்.

முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் தொடக்க வீரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ மற்றும் மினோத் பானுகா ஆகிய இருவரும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இந்திய ஃபாஸ்ட் பவுலர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் தீபக் சாஹரின் பவுலிங்கை சிறப்பாக எதிர்கொண்டு, முதல் விக்கெட்டுக்கு  49 ரன்களை சேர்த்தனர். 

அவிஷ்கா ஃபெர்னாண்டோவை 32 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுத்தார் யுஸ்வேந்திர சாஹல். அதைத்தொடர்ந்து மினோத் பானுகா(27) மற்றும் பானுகா ராஜபக்சா(24) ஆகிய இருவரையும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார்.  அதன்பின்னர் தனஞ்செயா டி சில்வாவை 14 ரன்னில் க்ருணல் பாண்டியா வீழ்த்த, ஹசரங்கா மற்றும் கேப்டன் தசுன் ஷனாகா ஆகிய இருவரும் ஓரளவிற்கு நன்றாக ஆடி முறையே 38 மற்றும் 39 ரன்கள் அடித்தனர். பின்வரிசையில் இறங்கிய சாமிகா கருணரத்னே பொறுப்புடன் ஆடி 35 பந்தில் 43 ரன்கள் அடிக்க, 50 ஓவரில் 262 ரன்கள் அடித்த இலங்கை, 263 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இந்திய அணி சார்பில், ஸ்பின்னர்கள் குல்தீப் யாதவ், சாஹல் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹர் ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து 263 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா, முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி அதிரடியாக தொடங்கினார். அதே அதிரடியை அடுத்த சில ஓவர்களுக்கும் தொடர்ந்த பிரித்வி ஷா, 24 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 43 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதையடுத்து மூன்றாம் வரிசையில் பேட்டிங் ஆடவந்த அறிமுக வீரர் இஷான் கிஷனும் அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய இஷான் கிஷன் 42 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 59 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் மனீஷ் பாண்டே 26 ரன்னில் ஆட்டமிழந்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழ, மறுமுனையில் நிலைத்து ஆடிய கேப்டன் ஷிகர் தவான் அரைசதம் அடித்தார். அவருடன் 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், அடித்து ஆடி 20 பந்தில் 31 ரன்கள் அடிக்க, 37வது ஓவரிலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணி. கேப்டன் ஷிகர் தவான் 86 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த வெற்றியையடுத்து 1-0 என இந்திய அணி ஒருநாள் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
 

click me!