தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மிகப்பெரிய இன்னிங்ஸ் வெற்றி.. டெஸ்ட் தொடரை வென்று இந்திய அணி சாதனை.. 200 புள்ளிகளுடன் கெத்து காட்டும் கோலி&கோ

By karthikeyan VFirst Published Oct 13, 2019, 3:17 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் வென்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது. 
 

புனேவில் கடந்த 10ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 601 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை இரண்டாம் நாள் இறுதியில் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, மூன்றாம் நாளான நேற்றைய ஆட்டமுடிவில் முதல் இன்னிங்ஸில் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

ஃபாலோ ஆனை தவிர்ப்பதற்கான ஸ்கோரைக்கூட தென்னாப்பிரிக்க அணி தவிர்க்காமல் ஆல் அவுட்டானது. இதையடுத்து ஃபாலோ ஆன் பெற்ற தென்னாப்பிரிக்க அணி, நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்கத்திலிருந்தே இந்திய அணி விக்கெட் வேட்டையை தொடங்கிவிட்டது. முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே மார்க்ரம் அவுட்டாக, டி ப்ருய்னும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். 

அதன்பின்னர் டுப்ளெசிஸை 5 ரன்களில் அஷ்வின் வெளியேற்றினார். நன்றாக ஆடிக்கொண்டிருந்த எல்கரையும் 48 ரன்களில் அஷ்வினே வீழ்த்தினார். உணவு இடைவேளைக்கு முன்பாக தென்னாப்பிரிக்க அணி நான்கு விக்கெட்டுகளை இழந்தது. உணவு இடைவேளை முடிந்து வந்ததும், டி காக்கை சோபிக்கவிடாமல் 5 ரன்களில் ஜடேஜா வீழ்த்திய ஜடேஜா, பவுமாவை 38 ரன்களில் வீழ்த்தினார். முத்துசாமியை ஷமி வீழ்த்தினார். 

தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது செசனில் 3 விக்கெட்டுகளை இழந்தது. 129 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணிக்கு, முதல் இன்னிங்ஸை போலவே ஃபிளாண்டரும் மஹாராஜும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்கோரை மெது மெதுவாக உயர்த்தியதோடு, விக்கெட்டையும் இழந்துவிடாமல் கவனமாக ஆடினர். 

முதல் இன்னிங்ஸை போலவே பார்ட்னர்ஷிப் அமைத்து கொண்டிருந்த இந்த ஜோடியை உமேஷ் யாதவ் பிரித்தார். ஃபிளாண்டரை 37 ரன்களில் வீழ்த்திய உமேஷ் யாதவ், அதே ஓவரின் கடைசி பந்தில் ரபாடாவையும் வீழ்த்தினார். அதற்கடுத்த ஓவரிலேயே மஹாராஜின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்த, தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என தொடரை வென்றது. 

ஏற்கனவே 160 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்துவரும் இந்திய அணி, இந்த வெற்றியின் மூலம் கூடுதலாக 40 புள்ளிகளை பெற்று 200 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 11வது டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிகமான தொடர்களை தொடர்ச்சியாக வென்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 2013லிருந்து இந்தியாவில் இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்ததேயில்லை. 
 

click me!