டேவிட் மில்லரின் அபார சதம் வீண்.. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று இந்தியா சாதனை

By karthikeyan VFirst Published Oct 2, 2022, 11:18 PM IST
Highlights

இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வென்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது டி20 போட்டி கவுகாத்தியில் நடந்தது. 

இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் முறையாக டி20 தொடரை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - புவனேஷ்வர் குமாரை விட அவர் பன்மடங்கு சிறந்த பவுலர்..! T20 WC-ல் அவரை ஆடவைங்க.. டேனிஷ் கனேரியா அட்வைஸ்

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரிலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வெய்ன் பர்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.

முதலில் பேட்டிங்  ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் - ராகுல் அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 9.5 ஓவரில் 96 ரன்களை சேர்த்து கொடுத்தனர். ரோஹித் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, அரைசதம் அடித்த ராகுல் 57 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் தென்னாப்பிரிக்க பவுலிங்கை தெறிக்கவிட்டார். ரபாடா வீசிய 15வது ஓவரில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். அடுத்த ஓவரிலும் ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரி அடித்தார். அதிரடியாக ஆடி 18 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 22 பந்தில் 61 ரன்களை குவித்து ரன் அவுட்டானார்.  அதிரடியாக ஆடிய விராட் கோலி 28 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 49 ரன்களை விளாச, தினேஷ் கார்த்திக் கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி சிறப்பாக முடித்து கொடுத்தார். ஆடிய வீரர்கள் அனைவருமே அடித்து ஆடி ஸ்கோர் செய்ய, 20 ஓவரில் 237 ரன்களை குவித்தது இந்திய அணி.

238 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான டெம்பா பவுமா (0) மற்றும் ரிலீ ரூசோ (0) ஆகிய இருவரையுமே 2வது ஓவரிலேயே டக் அவுட்டாக்கி அனுப்பினார் அர்ஷ்தீப் சிங். எய்டன் மார்க்ரம் 19 பந்தில் 33 ரன்கள் அடித்து அக்ஸர் படேலின் பந்தில் வெளியேறினார்.

தொடக்க வீரர் குயிண்டன் டி காக் அவுட்டாகாமல் களத்தில் நிலைத்து நின்றாலும் ஷாட் சரியாக கனெக்ட் ஆகாமல் இருந்தது. ஆனால் டேவிட் மில்லர் அடித்து ஆடி அரைசதம் அடித்தார். 14வது ஓவர் வரை மெதுவாக ஆடிய டி காக், அக்ஸர் படேல் வீசிய 15வது ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி, அவரும் அரைசதம் அடித்தார்.

இதையும் படிங்க - தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்திய ஒருநாள் அணி அறிவிப்பு! கேப்டன் தவான்.. 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு

அரைசதம் அடித்து களத்தில் நன்றாக செட்டில் ஆன டேவிட் மில்லரும் டி காக்கும் களத்தில் இருந்த போதிலும் 17வது ஓவரை சிறப்பாக வீசினார் தீபக் சாஹர். மில்லர் மற்றும் டி காக் ஆகிய இருவரும் கடைசிவரை களத்தில் நின்றும் கூட, அவர்களால் இலக்கை அடிக்க முடியவில்லை. ஆனால் இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடியதால் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவரில் 221 ரன்களை குவித்தது. அபாரமாக ஆடி சதமடித்த டேவிட் மில்லர் 47 பந்தில் 106 ரன்களை குவித்தார். டி காக் 69 ரன்கள் அடித்தார். இந்திய அணி 237 ரன்களை குவித்ததால் மட்டுமே இந்த போட்டியை ஜெயிக்க முடிந்தது. 

இந்த போட்டியில் 16  ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதல் முறையாக இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்றது. 
 

click me!