சூப்பர் ஓவரில் சட்டு புட்டுனு சோலியை முடித்த ராகுல் - கோலி.. இந்திய அணி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jan 31, 2020, 4:53 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது டி20 போட்டியும் டையில் முடிந்ததை அடுத்து, மூன்றாவது டி20 போட்டியை போலவே இந்த போட்டியிலும் சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. 
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை வென்ற நிலையில், நான்காவது போட்டி இன்று நடந்தது. 

3வது டி20 போட்டி டையில் முடிந்ததை போலவே இந்த போட்டியும் டையில் முடிந்தது. வெலிங்டனில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ராகுலை தவிர யாருமே சரியாக ஆடவில்லை. ராகுல் அதிரடியாக ஆடி 39 ரன்கள் அடித்தார். சஞ்சு சாம்சன் 8 ரன்களிலும் கோலி 11 ரன்களிலும் ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தரும் சோபிக்கவில்லை. இதையடுத்து இந்திய அணி 88 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

அதன்பின்னர் மனீஷ் பாண்டேவும் ஷர்துல் தாகூரும் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஷர்துல் தாகூர் 20 ரன்கள் அடித்தார். மனீஷ் பாண்டே கடைசி வரை களத்தில் நின்று 36 பந்தில்ம் 50 ரன்கள் அடித்தார். அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி 165 ரன்கள் என்ற டீசண்ட்டான ஸ்கோரை எட்டியது. 

166 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் கப்டில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார். ஆனால் காலின் முன்ரோ அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அரைசதத்திற்கு பின்னரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த அவரை 64 ரன்களில் விராட் கோலி அபாரமாக ரன் அவுட் செய்து அனுப்பினார். 

அதன்பின்னர் டாம் ப்ரூஸ் டக் அவுட்டானார். ஆனால் டிம் சேஃபெர்ட் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு வெறும் 7 ரன்கள் மட்டுமே தேவை. ஷர்துல் தாகூர் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் டெய்லர் அவுட்டானார். இரண்டாவது பந்தில் டேரைல் மிட்செல் பவுண்டரி அடித்தார். ஆனால் மூன்றாவது பந்தை அவர் அடிக்காமல் விட, அதற்கு ரன் ஓடும்போது சேஃபெர்ட் ரன் அவுட்டானார். நான்காவது பந்தில் சாண்ட்னெர் ஒரு ரன் அடித்தார். ஐந்தாவது பந்தில் மிட்செல் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இரண்டாவது ரன் ஓடும்போது சாண்ட்னெர் ரன் அவுட்டானார். இதையடுத்து போட்டி டையில் முடிந்தது. 

இதையடுத்து மூன்றாவது போட்டியை தொடர்ந்து இந்த போட்டியும் டையில் முடிந்ததை அடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. இந்திய அணியின் சார்பில் சூப்பர் ஓவரை பும்ரா வீசினார். 

நியூசிலாந்து அணியில் இந்த போட்டியில் நல்ல ஃபார்மில் பேட்டிங் ஆடிய சேஃபெர்ட்டும் முன்ரோவும் களமிறங்கினர். முதல் பந்தில் 2 ரன்கள் அடித்த சேஃபெர்ட், இரண்டாவது பந்தில் பவுண்டரியும் மூன்றாவது பந்தில் 2 ரன்களும் அடித்து நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். ஐந்தாவது பந்தில் முன்ரோ பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் நியூசிலாந்து அணி 13 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 14 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. 

சூப்பர் ஓவரில் 14 ரன்கள் என்ற இலக்கை விரட்ட இந்திய அணியின் சார்பில் ராகுலும் கோலியும் இறங்கினர். இந்த முறையும் சூப்பர் ஓவரை டிம் சௌதி தான் வீசினார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த ராகுல், இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஆனால் ராகுல் மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி 3 பந்தில் இந்திய அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவை. நான்காவது பந்தில் இரண்டு ரன்கள் அடித்த கோலி, ஐந்தாவது பந்தில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதையடுத்து இந்திய அணி மீண்டும் சூப்பர் ஓவரில் வெற்றி பெற்று அசத்தியது. 

இந்த வெற்றியை அடுத்து 4-0 என்ற முன்னிலையில் தொடரை வென்றிருக்கும் இந்திய அணி, கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது. 
 

click me!