#INDvsENG இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா சாதனை வெற்றி..! ஆட்டநாயகன் அஷ்வின்

By karthikeyan VFirst Published Feb 16, 2021, 1:02 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

இந்தியா இங்கிலாந்து இடையே சென்னையில் நடந்துவரும் முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சதம்(161), ரஹானே(67) மற்றும் ரிஷப் பண்ட்(58) ஆகியோரின் அரைசதம் ஆகியவற்றால் முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை குவித்தது.

2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் முதல் செசனில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிய, முதல் செசனிலேயே முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி, உணவு இடைவேளைக்கு முன்பாகவே 39 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. உணவு இடைவேளை முடிந்து 2வது செசனை தொடங்கிய சில நிமிடங்களில் ஸ்டோக்ஸ் 18 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து போப், லீச், ஸ்டோன், பிராட் ஆகியோர் ஆட்டமிழக்க, 2ம் நாளான இன்றைய ஆட்டத்தின் 3வது செசனில் 134 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது.  இந்திய அணியின் சார்பில் அஷ்வின் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்ஸர் படேல் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

195 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை  ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 14 ரன்களுக்கு ஆட்டமிழக்க, புஜாரா 14 ரன்னில் ரன் அவுட்டாக, ரோஹித் 26 ரன்னிலும் ரிஷப் பண்ட் 8 ரன்னிலும் ரஹானே 10 ரன்னிலும் அக்ஸர் படேல் 7 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஒருமுனையில் கோலி மட்டும் நிலைத்து நின்றார். 106 ரன்களுக்கே இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்துவிட, அதன்பின்னர் கோலியும் அஷ்வினும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச்சிறப்பாக ஆடினர். 7வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 96 ரன்கள் அடித்தனர். 

அரைசதம் அடித்த கோலி 62 ரன்னில் ஆட்டமிழக்க, தொடர்ந்து சிறப்பாக ஆடிய அஷ்வின், சவாலான சேப்பாக்கம் ஆடுகளத்தில் சிறப்பாக ஆடி சதமடித்தார். குல்தீப், இஷாந்த் சர்மா ஆகியோர் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக அஷ்வினும் 106 ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 286 ரன்கள் அடித்து, 482 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை இங்கிலாந்துக்கு நிர்ணயித்தது.

482 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்ட தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் சிப்ளியை வெறும் 3 ரன்னில் அக்ஸர் படேல் வீழ்த்த, மற்றொரு தொடக்க வீரரான ரோரி பர்ன்ஸை தனது அபாரமான சுழலில் அஷ்வின் 25 ரன்னில் விழ்த்தினார். அதைத்தொடர்ந்து நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய  ஜாக் லீச்சை முதல் பந்திலேயே கோல்டன் டக்காக்கி அனுப்பினார் அக்ஸர் படேல். 50 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் அடித்திருந்தது.

4ம் நாளான இன்றைய ஆட்டத்தில் ஜோ ரூட்டும் ஸ்டோக்ஸும் இணைந்து சிறிது நேரம் தாக்குப்பிடித்தனர். ஆனால் இம்முறையும் மிகவும் சுதாரிப்பாக ஆடியபோதிலும் ஸ்டோக்ஸை வெறும் 8 ரன்னில் வீழ்த்தினார் அஷ்வின். அதன்பின்னர் ஆலி போப், பென் ஃபோக்ஸ், ஆலி ஸ்டோன் ஆகியோர் ஆட்டமிழக்க, இழப்பதற்கு எதுவும் இல்லாத இங்கிலாந்து அணியின் மொயின் அலி அதிரடியாக ஆடி சிக்ஸர் மழை பொழிந்தார். வெறும் 18 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 43 ரன்கள் அடிக்க, அவரை குல்தீப் யாதவ் கடைசி விக்கெட்டாக வீழ்த்த, 2வது இன்னிங்ஸில் 164 ரன்களுக்கு இங்கிலாந்து அணி சுருண்டதையடுத்து, இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இது. இதற்கு முன் 1986ல் இங்கிலாந்தை இந்திய அணி 279 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதுதான் மிகப்பெரிய வெற்றியாக இதுவரை இருந்தது.

பவுலிங்கில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 2வது இன்னிங்ஸில் சவாலான கண்டிஷனில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த அஷ்வின் தான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

click me!