#AUSvsIND தவான்அரைசதம், கடைசி நேர ஹர்திக் பாண்டியாவின் காட்டடியால் அபார வெற்றி பெற்று டி20 தொடரை வென்ற இந்தியா

By karthikeyan VFirst Published Dec 6, 2020, 5:30 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் அபார வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி.

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி சிட்னியில் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் ஷார்ட்டை 9 ரன்களுக்கு நடராஜன் வெளியேற்றினார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ வேட், தொடக்கம் முதலே இந்திய பவுலர்களின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார். ஆரம்பத்திலிருந்தே அடித்து ஆடிய வேட், 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 25 பந்தில் அரைசதம் அடித்தார். வாஷிங்டன் சுந்தர் வீசிய 8வது ஓவரின் கடைசி பந்தில் மேத்யூ வேடின் கேட்ச்சை கோட்டைவிட்டார். ஆனால் வேட் அதற்கு ரன் ஓட, கோலி ரன் அவுட் செய்தார். வேட் 32 பந்தில் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல், 12 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 22 ரன்கள் அடித்து 13வது பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய ஸ்மித், 30 பந்தில் 30 ரன்கள் மட்டுமே அடித்திருந்த நிலையில், அடுத்த 7 பந்தில் பதினாறு ரன்கள் அடித்து, 38 பந்தில் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஹென்ரிக்ஸ் 26 ரன்களுக்கு 19வது ஓவரில் நடராஜனின் பந்தில் ஆட்டமிழக்க, கடைசி நேரத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 7 பந்தில் ஒரு சிக்ஸருடன் 16 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 194 ரன்கள் அடித்த ஆஸ்திரேலிய அணி, 195 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.

195  ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் கேஎல் ராகுல் மற்றும் தவான் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 22 பந்தில் 30 ரன்கள் அடித்து ராகுல் அவுட்டாக, முதல் விக்கெட்டுக்கு 56 ரன்களை சேர்த்து கொடுத்தனர். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த தவான் 36 பந்தில் 52 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சன் பதினைந்து ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதிரடியாக ஆடிய கோலியும் 24 பந்தில் 40 ரன்கள் அடித்து அவுட்டானார்.

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்டியாவும் ஷ்ரேயாஸ் ஐயரும் டெத் ஓவர்களில் அடித்து ஆடி இந்திய அணியை வெற்றி பெற செய்தனர். கடைசி 2 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு இருபத்தைந்து ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 19வது ஓவரில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் அடித்த ஹர்திக் பாண்டியா, கடைசி ஓவரில் 2 சிக்ஸர்களை விளாசி கடைசி ஓவரின் 4வது பந்திலேயே இலக்கை எட்டி இந்திய அணியை வெற்றி பெற செய்தார். இந்த வெற்றியை அடுத்து 2-0 என வென்றது.
 

click me!