இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்தப் போட்டி ஹராரேயில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணிக்கு சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், இவர்கள் மூவரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த நிலையில், நேற்று முன் தினம் டிராபியோடு வீடு திரும்பினர்.
இவர்கள் நாடு திரும்புவதற்கு முன்னதாக இவர்களுக்கு பதிலாக, சாய் சுதர்சன், ஜித்தேஷ் சர்மா, ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற்றனர். அதுவும் முதல் 2 டி20 போட்டிகளுக்கு மட்டுமே இவர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன் பிறகு எஞ்சிய 3 போட்டிகளுக்கு சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் நேற்று முன் தினம் இந்திய அணி வீரர்கள் நாடு திரும்பிய நிலையில், சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் விரைவில் ஜிம்பாப்வே புறப்பட்டுச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தொடங்கும் முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்றும், 3ஆவது வரிசையில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில் 6 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதே போன்று, ஜிம்பாப்வே 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா 186 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே 115 ரன்கள் மட்டுமே எடுத்து 71 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.