டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்றில் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் சேர்ந்து செய்த அபார சாதனை

By karthikeyan VFirst Published Oct 6, 2019, 4:34 PM IST
Highlights

இந்திய அணியும் தென்னாப்பிரிக்க அணியும் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமான சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 502 ரன்களையும், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்களையும் அடித்தன. 

71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 323 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 395 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 191 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமானதாகவே அமைந்தது. முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மா சதமும் மயன்க் அகர்வால் இரட்டை சதமும் அடித்தனர். அதேபோல தென்னாப்பிரிக்க அணியில் எல்கர் மற்றும் டி காக் சதமடித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் விரைவாக முடிந்தவரை ரன்களை குவித்துவிட்டு தென்னாப்பிரிக்காவை பேட்டிங் ஆட விட வேண்டும் என்பதால் இந்திய வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். புஜாராவே 2 சிக்ஸர்கல் விளாசினார் என்றால் பாருங்கள்.

முதல் இன்னிங்ஸில் ரோஹித்தும் மயன்க் அகர்வாலும் தலா 6 சிக்ஸர்கள் விளாசினர். ஜடேஜா ஒரு சிக்ஸர் விளாசினார். எனவே முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் மொத்தமாக 13 சிக்ஸர்கள் விளாசினர். தென்னாப்பிரிக்க அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் மொத்தம் 7 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமாக 14 சிக்ஸர்கள் விளாசினர். தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 சிக்ஸர்கள் அடித்தது. எனவே மொத்தமாக இந்த போட்டியில் இந்திய வீரர்கள் 27 சிக்ஸர்களையும் தென்னாப்பிரிக்க வீரர்கள் 10 சிக்ஸர்களையும் விளாசினர். இந்த போட்டியில் மொத்தமாக 37 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. 

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது இந்த போட்டியில்தான். இதற்கு முன்னதாக 2014ம் ஆண்டு ஷார்ஜாவில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் 35 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 
 

click me!