ஜோ ரூட்டிடம் சரணடைந்த இந்திய வீரர்கள்; சீட்டுக்கட்டாய் சரிந்த பேட்டிங் ஆர்டர்! ஒரே செசனில் சுருண்ட அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Feb 25, 2021, 4:44 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டின் முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்திருந்த இந்திய அணி, 145 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது.
 

இந்தியா இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 112 ரன்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி மட்டுமே அந்த அணியில் சிறப்பாக பேட்டிங் ஆடினார். அதிரடியாக ஆடி 84 பந்தில் 53 ரன்கள் அடித்தார். அவரை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே அக்ஸர் படேல் மற்றும் அஷ்வினின் சுழலில் தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அக்ஸர் படேல் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா ஒரு விக்கெட்டையும் வீழ்த்த, 112 ரன்களுக்கே சுருண்டது இங்கிலாந்து அணி.

முதல் நாள் ஆட்டத்தின் 2வது செசனிலேயே இங்கிலாந்து அணி ஆல் அவுட்டாக, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 2வது செசனை விக்கெட்டே இல்லாமல் முடித்தது. 3வது செசனிலும் ரோஹித்தும் கில்லும் சிறப்பாகவே ஆடினர். 49 பந்துகள் களத்தில் ஆடிவிட்ட கில், ஆர்ச்சர் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே பவுன்ஸராக வீசிய பந்தை கில் புல் ஷாட் ஆட முயல, அது டாப் எட்ஜ் ஆகி கேட்ச் ஆனது. 50 பந்தில் 11 ரன்கள் அடித்து கில் ஆட்டமிழந்தார்.

புஜாரா லீச்சின் பந்தில் ரன்னே அடிக்காமல் ஆட்டமிழக்க, இந்திய அணி  34 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார். ரோஹித் - கோலி இடையே பார்ட்னர்ஷிப் பில்ட் ஆனதால் இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் அதிகமானது. சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா அரைசதம் அடிக்க, சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி, ஜாக் லீச்சின் பந்தில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்டத்தின் கடைசி ஓவரில் கோலி ஆட்டமிழக்க, ரோஹித்தும் ரஹானேவும் 3ம் நாள் ஆட்டத்தை முடித்தனர்.

முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் அடித்திருந்தது இந்திய அணி. 2ம் நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ரஹானே ஜாக் லீச்சின் சுழலில் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதன்பின்னர் ரோஹித் சர்மாவும் லீச்சின் பந்தில் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் ஜோ ரூட்டின் பவுலிங்கில் ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகியோர் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, ஒருமுனையில் தாக்குப்பிடித்த அஷ்வினும் 17 ரன்னில் ரூட்டின் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக  பும்ராவும் ரூட்டின் பந்திலேயே ஆட்டமிழக்க, இந்தியா நி 145 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் கேப்டன் ஜோ ரூட் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 

click me!