ICC Test Ranking: நியூசிலாந்தை தோற்கடித்து மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய அணி

By karthikeyan VFirst Published Dec 6, 2021, 3:17 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
 

கடந்த சில ஆண்டுகளில் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிக காலம் முதலிடத்தில் இருந்துவரும் அணி இந்திய அணி தான். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஜெயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.

இதையடுத்து இந்திய அணியை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தை பிடித்தது நியூசிலாந்து அணி. இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என வென்றதையடுத்து தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக 119 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2ம் இடத்தில் இருந்தது இந்திய அணி. இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் 372 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றதையடுத்து, 124 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது இந்திய அணி.

121 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 2ம் இடத்தில் நியூசிலாந்து அணியும், 108 மற்றும் 107 புள்ளிகளுடன் முறையே ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 3 மற்றும் 4 இடங்களில் உள்ளன.
 

click me!