ஊரடங்கால் சமூக வலைதளங்களில் மூழ்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள்.. ஐசிசி பகிரங்க எச்சரிக்கை

By karthikeyan VFirst Published Apr 19, 2020, 3:05 PM IST
Highlights

கொரோனா ஊரடங்கால் வீடுகளில் முடங்கியிருக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் மூழ்கியிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

உலகம் முழுதும் காட்டுத்தீயாய் பரவிவரும் கொரோனா, மேலும் பரவாமல் தடுக்க, பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்திவிட்டு, தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தலால் உலக பொருளாதாரமே முடங்கியுள்ளது. சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தும் முடங்கியுள்ளன. 

அதனால் கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன. சர்வதேச போட்டிகள், உள்நாட்டு போட்டிகள் என எதுவுமே நடக்கவில்லை. மார்ச் 15ம் தேதி நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டி தான் கடைசியாக நடந்த போட்டி. 

அந்தவகையில் ஊரடங்கால் வீடுகளில் முடங்கியுள்ள கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளங்களில் பொழுதை போக்கி வருகின்றனர். டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் ஆக்டிவாக உள்ளனர். இந்த சமூக வலைதளங்களின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடுவது, சக வீரர்களுடன் உரையாடுவது, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது என சமூக வலைதளங்களின் மூலம் பொழுதை போக்கிவருகின்றனர்.

இந்நிலையில், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் கிரிக்கெட் வீரர்களை ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அலெக்ஸ் மார்ஷல் கவனமாக இருக்குமாறு எச்சரித்துள்ளார். இதுகுறித்து எச்சரிக்கை விடுத்துள்ள மார்ஷல், இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வீரர்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளனர். இதை பயன்படுத்திக்கொள்ள சில மேட்ச் ஃபிக்ஸிங் இடைத்தரர்கள் முனைவது கண்டறியப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்கள் ஆக்டிவாக இருப்பதை பயன்படுத்தி, சூதாட்டக்காரர்கள் அவர்களது எதிர்கால திட்டங்களுக்காக, சமூக வலைதளங்களில் கிரிக்கெட் வீரர்களுடனான உறவை வளர்த்துக்கொள்ள பார்க்கின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் நடக்கவில்லை என்றாலும், இந்த சூதாட்டக்காரர்கள் ஓயவில்லை. அவர்கள் எல்லா காலத்திலும் ஆக்டிவாகவே உள்ளனர். எனவே அதுமாதிரியான ஆட்களிடமிருந்து வீரர்களும் போர்டு உறுப்பினர்களும் மிகக்கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளது. 
 

click me!