என் கேப்டன்சியில் அவரு மட்டும் ஆடியிருந்தால் கேகேஆருக்கு கூடுதலா 2 கோப்பையை ஜெயிச்சு கொடுத்துருப்பேன்- கம்பீர்

By karthikeyan VFirst Published Apr 18, 2020, 5:23 PM IST
Highlights

கேகேஆர் அணிக்கு 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கவுதம் கம்பீர், ஒரே ஒரு வீரர் மட்டும் தனது கேப்டன்சியில் ஆடியிருந்தால், கூடுதலாக 2 கோப்பையை தன்னால் ஜெயித்து கொடுத்திருக்க முடியும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
 

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. இந்த 12 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 4 முறையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் அதற்கடுத்தபடியாக கேகேஆர் அணி 2 முறையும் கோப்பையை வென்றுள்ளன. 

ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சிஎஸ்கே ஆகிய இரு அணிகளும் வெற்றிகரமான அணிகள். அந்த அணிகளுக்கு அடுத்தபடியாக வெற்றிகரமான அணி என்றால் அது கேகேஆர் அணி தான். கம்பீர் தலைமையிலான கேகேஆர் அணி 2012 மற்றும் 2014 ஆகிய இரண்டு சீசன்களிலும் டைட்டிலை வென்றது.

2012 ஐபிஎல் ஃபைனலில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற கேகேஆர் அணி, 2014 ஃபைனலில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. கேகேஆர் அணிக்கு ஒரு கேப்டனாகவும் வீரராகவும் கம்பீர் வழங்கிய பங்களிப்பு அளப்பரியது. 

2017ம் ஆண்டு வரை கேகேஆர் அணியில் ஆடிய கம்பீர், ஒரு மாற்றம் தேவையென்பதற்காகவும் தனது சொந்த ஊர் அணியான டெல்லி அணிக்கு முதல் கோப்பையை வென்று கொடுப்பதற்காகவும் 2018 சீசனில் கேகேஆர் அணியிலிருந்து வெளிவந்து டெல்லி அணியில் 2018 சீசனில் ஆடினார். ஆனால் அந்த சீசனின் தொடக்கத்தில் சில போட்டிகளில் அவரும் சரியாக ஆடவில்லை, அணியும் ஜெயிக்கவில்லை. அதனால் ஐபிஎல்லில் இருந்து ஒதுங்கினார்.

இந்நிலையில், கேகேஆர் அணிக்காக 2 முறை ஐபிஎல் டைட்டிலை வென்று கொடுத்த கம்பீர், கேகேஆர் அணியின் நட்சத்திர வீரராக திகழும் அதிரடி மன்னன் ஆண்ட்ரே ரசல் மட்டும் தனது கேப்டன்சியில் கூடுதலாக சில ஆண்டுகள் ஆடியிருந்தால் மேலும் 2 கோப்பையை கேகேஆர் அணி வென்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள கம்பீர், நான் கேகேஆர் அணியில் ஆடிய 7 ஆண்டுகள், ஆண்ட்ரே ரசல் என்னுடன் கேகேஆர் அணியில் ஆடியிருந்தால், இன்னும் 2 கோப்பைகளை கேகேஆர் அணி வென்றிருக்கும் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.

அதிரடி பேட்ஸ்மேனான ஆண்ட்ரே ரசல், கடந்த இரண்டு சீசன்களிலும் காட்டடி அடித்தார். ரசல் ஆடும் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியென்றால், 200 ரன்கள் என்ற இலக்கே போதாது; கூடுதலாக அடிக்க வேண்டும் என்ற பீதியை எதிரணிகளுக்கு கிளப்பியவர் ரசல். எவ்வளவு பெரிய இலக்கை விரட்டும்போதும், இது முடியாது என்ற மனநிலை கொஞ்சம் கூட இல்லாமல், பாசிட்டிவ் மனநிலையுடன் சிக்ஸர்களை பறக்கவிட்டு வெறித்தனமாக இலக்கை விரட்டுபவர் ஆண்ட்ரே ரசல். பேட்டிங்கில் மட்டுமல்லாமல் பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து வகையிலும் சிறப்பான பங்களிப்பை அளிக்கக்கூடியவர். 

கடந்த சீசனில் அவருக்கு மணிக்கட்டில் அடிபட்டு, வலி ஏற்பட்டது. ஆனாலும் மணிக்கட்டு வலியைக்கூட பொருட்படுத்தாமல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரசல் 20-30 பந்துகள் ஆடினால் போதும். ஆட்டமே தலைகீழாக மாறிவிடும். அந்தளவிற்கு காட்டடி அடிக்கக்கூடிய வீரர். அதிலும் குறிப்பாக கடந்த 2 சீசன்களில் அவரது ஆட்டம் அபாரம்.

கம்பீர் 2011லிருந்து 2017 வரையிலான 7 ஆண்டுகள் கேகேஆர் அணியில் ஆடினார். ரசல், 2014ல் தான் கேகேஆர் அணிக்குள் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2018 ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் அடித்த ரசல், 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஃபினிஷரான ரசலுக்கு நிறைய பந்துகள் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காது. அப்படியிருந்தும் கூட, கடந்த சீசனில் 510 ரன்களை குவித்ததுடன் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் ரசல்.
 

click me!